சிறப்புக் கட்டுரைகள்

மலைகளின் ராணி முசோரி + "||" + Queen of the Mountains Mussoorie

மலைகளின் ராணி முசோரி

மலைகளின் ராணி முசோரி
கேப்டன் யங் என்ற ஐரிஷ் அதிகாரி இங்கு வந்தபோது இதன் அழகிலும் இதமான தட்பவெப்பத்திலும் வசீகரிக்கப்பட்டு முசோரியில் தங்கி, அதை விரிவாக்கினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில் மிக பசுமையான மலை நகரம் முசோரி. இதை ‘மன்சூரி’ என்றும், ‘மலைகளின் ராணி’ என்றும் அழைக்கிறார்கள். கேப்டன் யங் என்ற ஐரிஷ் அதிகாரி இங்கு வந்தபோது இதன் அழகிலும் இதமான தட்பவெப்பத்திலும் வசீகரிக்கப்பட்டு முசோரியில் தங்கி, அதை விரிவாக்கினார். அங்கு மன்சூர் எனும் புதர்செடி அதிகமாக காணப்படுவதால் ஆங்கிலேயர்கள் அந்த பெயரையே இந்த இடத்துக்கு சூட்டினார்கள். இங்கு உயரமான ஓக், பைன், மேபிள் போன்ற மரங்களும் காணப்படுகின்றன. முசோரியில் உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் எந்த வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும், அழகாகவும் இருக்கிறது. இங்கே உள்ள சாலைகளின் வளைவுகளில், இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை, பயணங்களில் நிறைய பாடங்களை கற்கலாம் போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், இங்கே வசிக்கிறார்கள். இந்தியாவின் முதல் நில கணக்காளர் ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது. 1825-ல் கேப்டன் யங் கட்டிய முல்லிங்கர் வீடு, அரண்மனைகள் போன்ற வரலாற்று புகழ்மிக்க இடங்கள் ஏராளமான இருக்கின்றன.

முசோரியின் உயரமான இடமான லால்டிப்பா, லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதனால் சுற்றுலா பயணிகள் இந்த நேரங்களில் அதிகமாக குவிகின்றனர்.

லால்டிப்பாவுக்கு போகும் வழியில் 1839-ம் ஆண்டு கட்டப்பட்ட மிக பழமையான செயின்ட் பால் மாதா தேவாலயம் இருக்கிறது. இதன் அருகில் இருக்கும் சார் துகான் என்ற நான்கு கடைகள் புகழ்பெற்றவை. 1920-களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன. மிகச்சிறந்த சிற்றுண்டிகளும் பலவித சுவைகளில் தேநீரும் கிடைக்கிறது.

கம்பெனி தோட்டம் மிகப்பெரியதாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் இதை மிகவும் அழகுணர்ச்சியுடன் அமைத்திருக்கின்றனர். பலவிதமான பூக்கள், அழகான வடிவங்களில் வெட்டுப்பட்டுள்ள சீரான செடிகள், நூற்றுக்கணக்கான பூக்களை தாங்கி கொண்டு நிற்கும் ரோஜா செடிகள் போன்றவற்றை ரசித்து பார்க்கலாம். அருகில் ஏரியும், செயற்கை நீருற்றும் உள்ளன. இங்கிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கெம்ப்டி அருவியின் அழகை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. மகிழ்ச்சியும் சாகசமும் தரும் அற்புதமான இடங்களில் முசோரியும் முக்கியமானது.