மனிதநேயம் காப்போம்


மனிதநேயம் காப்போம்
x
தினத்தந்தி 7 Jun 2021 5:24 PM GMT (Updated: 7 Jun 2021 5:24 PM GMT)

பாதிக்கப்படுகின்ற மனிதனுக்கு உதவுவதே மனிதநேயம். இந்த பண்பு எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது.

மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டியதே மனிதநேயம் தான். ஆனால் அதை வெளிப்படுத்துவதில் பலரும் முதன்மை பெற்றவர்களாக இல்லை. இது பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுத்துவிடுகிறது. மனித பண்புகள் குறைகிறபோது சமூக ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. எனவே ஒருவரை ஒருவர் நேசிக்கிற மனிதநேயம் வளரவேண்டும். அதுவே வேற்றுமை மறையவும், ஒற்றுமை மலரவும் உதவும்.

ஒருவன் வாழ்வதற்கும், தன்னை மேம்படுத்தி கொள்வதற்கும் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் மற்றவர்களின் மனதில் நிலைத்து நிற்பதற்கு நல்ல பண்புகளும், மனிதநேயமும் அவசியம். அதுதான் ஒருவருக்கு நீடித்த புகழை அளிக்கும் நல்ல பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்கிறபோது அது நற்பண்புகளாக மலர்கிறது. அந்த நற்பண்பின் செயல்கள் தான் உயர்ந்த மனிதநேயமாக பார்க்கப்படுகிறது.

ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு பிரதிபலன் பாராமல் ஒவ்வொருவரும் உதவவேண்டும். அந்த நிலைக்கு உயர்வதற்கு வாழ்தலின் உண்மையான அர்த்தங்களை புரிந்துகொள்ள வேண்டும். எந்தநிலையில் இருந்தும் வாழ்க்கையின் திசை மாறக்கூடும். யாருக்கும் எந்த இடமும் நிரந்தரமான ஒன்று அல்ல. தொடர்ந்து ஓடும் காலச்சக்கரத்தில் ஒவ்வொருவரின் நிலையும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டால் தான் வாழ தகுதியானவர்களாக இருக்க முடியும். ஆனால் அந்த மாற்றம் என்பது இருக்கிற சூழலை எதிர்கொள்வதாக இருக்கும்பட்சத்தில் தவறு ஏதும் இல்லை. மாறாக உண்மையான பண்புகளை மாற்றிக்கொள்வதாக இருந்துவிடக்கூடாது. ஒருவரின் தன்மையை வெளிப்புற தோற்றத்தில் இருந்து மதிப்பீடு செய்ய முடியாது. அப்படி செய்தால் அது பல நேரங்களில் தவறாக போய்விடும். மாறாக உள்ளார்ந்த வகையில் பழகுகிறபோது ஏற்படுகிற நம்பகத்தன்மையின் மூலம் தான் ஒருவரின் உண்மையான தன்மை என்ன என்று உறுதியாக சொல்ல முடியும். மனிதநேயம் இல்லாத மனிதனை ஒரு பொருளாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அது போன்றவர்களிடம் உணர்வு ரீதியாக எந்த வகையிலும் மாற்றத்தை காணமுடியாது. நேசிக்கிற தன்மை உள்ளவர்களால் தான் இதயங்களை ஈர்க்க முடியும். ஒருவரின் துயரத்தை புரிந்துகொண்டு அதை தீர்ப்பதற்கு முன்வருகிற பண்பை நேரடியாக காணமுடியும். நேசம் உள்ள மனிதர்கள் தான் மற்றவர்களுடன் உறவை பேணுகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் பகை உணர்ச்சியோ, வெறுப்போ மேலோங்குவது இல்லை. அதோடு அவர்கள் எப்போதும் அடுத்தவர் இடத்தில் இருந்து சிந்திக்கிறார்கள். பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும், தீர்வு காணும் ஆவல் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். முன்பின் அறியாத மனிதர்களுக்கு உதவுவதற்கு இதயத்தில் நேசம் இருக்கவேண்டும். ஒருநிகழ்வு நம்மை பாதிக்கிறபோது உடனே உதவுவது தான் உண்மையான மனிதநேயம். மாறாக பார்க்க பரிதாபமாக இருக்கிறது. கண்ணீர் வருகிறது தாங்க முடியவில்லை என்ற வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு அதை கடப்பதால் எந்த பயனும் இல்லை. மேலும் வெறும் வார்த்தைகள் நேசத்தின் அடையாளம் அல்ல. தோளோடு தோள் கொடுத்து உதவுவதே உண்மையான மனிதநேயமாக இருக்கமுடிவும். அதைச் செய்ய நம்முடைய மனமும், உடலும் ஒருங்கே இணையவேண்டியது அவசியமானது. கொரோனா 2-வது அலை என்பதும் நெருக்கடியான காலத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். சாலையோரத்தில் வேலை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு உணவு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும். மனிதநேயத்தை காப்போம், வருங்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்வோம்.

Next Story