இந்தியாவின் ‘முதல்’ பதக்கங்கள்


இந்தியாவின் ‘முதல்’ பதக்கங்கள்
x
தினத்தந்தி 7 July 2021 12:25 AM GMT (Updated: 7 July 2021 12:25 AM GMT)

ஒலிம்பிக்கில் இந்தியா 1900-ம் ஆண்டில் இருந்து பங்கேற்று வருகிறது. இந்தியா இதுவரை 9 தங்கம் உள்பட 28 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை வென்றுத்தந்தவர் என்ற பெருமை தடகள வீரர் நார்மன் பிரிட்சார்ட்டையே சாரும். இங்கிலாந்து தம்பதியினருக்கு மகனாக கொல்கத்தாவில் பிறந்தவர், இந்த பிரிட்சார்ட். 1900-ம் ஆண்டு பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார். ஆனால் அப்போது இந்தியா, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் கொடியில் இங்கிலாந்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடை ஓட்டம் இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஒலிம்பிக்கில் பதக்கத்தை ருசித்த முதல் ஆசிய நாட்டவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. 1905-ம் ஆண்டுக்கு பிறகு இவர் இங்கிலாந்துக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்து நடிகராக மாறினார்.

இந்தியாவின் முதலாவது தங்கப்பதக்கம் 1928-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த ஒலிம்பிக்கில் ஆக்கி விளையாட்டின் மூலம் கிடைத்தது. தயான்சந்த் உள்ளிட்ட அசாத்திய திறமை படைத்த வீரர்களை கொண்ட இந்திய ஆக்கி அணி எல்லா அணிகளையும் துவம்சம் செய்தது. லீக் சுற்றில் 4 ஆட்டங்களில் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் மொத்தம் 26 கோல்கள் அடித்த இந்தியா, தங்கப்பதக்கத்துக்கான இறுதி சுற்றில் நெதர்லாந்தை 3-0 என்ற கோல் கணக்கில் ஊதித்தள்ளியது. 5 ஆட்டத்தில் 14 கோல்கள் பொழிந்த தயான்சந்தை ஆக்கி விளையாட்டின் மேஜிக் நிபுணர் என்று ஊடகங்கள் அப்போது புகழாரம் சூட்டின.

ஒலிம்பிக்கில் இந்தியாவின் தனிநபர் தங்கப்பதக்கம் தாகம் தணிய ஒரு நூற்றாண்டு காலம் காத்திருக்க வேண்டிருந்தது. 2008-ம் ஆண்டு சீனா தலைநகர் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா இலக்கை மிகதுல்லியமாக சுட்டு பதக்கமேடையில் தேசிய கீதத்தை இசைக்க வைத்து ஒட்டுமொத்த தேசத்தையும் பரவசப்படுத்தினார். தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையோடு வலம் வரும் பிந்த்ரா தனது 34-வது வயதிலேயே ஓய்வு பெற்றார்.

கர்ணம் மல்லேஸ்வரி...... ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மங்கை என்ற சாதனைக்குரியவர். தனது 12-வது வயதில் பளுதூக்குதல் பயிற்சியில் ஆர்வமுடன் ஈடுபடத் தொடங்கிய மல்லேஸ்வரி 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். மொத்தம் 240 கிலோ எடை தூக்கிய அவர் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்துக்கு முத்தமிட்டார்.

Next Story