சிறப்புக் கட்டுரைகள்

எக்ஸ்ரே பரிேசாதனையின் அவசியம் + "||" + The need for X-ray examination

எக்ஸ்ரே பரிேசாதனையின் அவசியம்

எக்ஸ்ரே பரிேசாதனையின் அவசியம்
மருத்துவப் பரிசோதனைகள் வரிசையில் எக்ஸ் கதிர்களின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான திருப்புமுனை. ஜெர்மனி விஞ்ஞானி ரான்ட்ஜென் இக்கதிர்களை எதேச்சையாகத்தான் கண்டுபிடித்தார். மின்காந்த கதிர்களுக்கு படியும் தன்மை இருப்பதால், இவற்றை ஒரு திட ஊடகத்தில் படியவைக்க முயன்றார்.
ஒரு சமயம் போட்டோ தகட்டின் மீது கைவிரல்களை வைத்திருந்த தன் மனைவியின் கை மீது இந்தக் கதிர்களைச் செலுத்தினார். அப்போது, அந்தத் தகட்டில் அவருடைய மனைவியின் கைவிரல் எலும்புகளும் அவர் அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன. இதிலிருந்து எலும்பு போன்ற கடினமான பொருட்களின் வழியே எக்ஸ் கதிர்கள் ஊடுருவுவது இல்லை, உறிஞ்சப்படுகின்றன என்பது புலனாயிற்று. இதன் பலனால் இந்தப் பொருட்களின் பிம்பங்கள் போட்டோ தகட்டில் நிழல்களாக விழுகின்றன என்பதும், அதேவேளையில் மெல்லிய திசுக்களின் வழியே இவை ஊடுருவிச் சென்றுவிடுவதால், இத்திசுக்கள் போட்டோ தகட்டில் தெரிவதில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த அறிவியல்தான் எக்ஸ்-ரே பரிசோதனைக்கு அடிப்படை ஆனது. எக்ஸ்-ரே எடுப்பதற்குச் சாதாரண எக்ஸ்-ரே, டிஜிட்டல் எக்ஸ்-ரே எனப் பல்வேறு எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எக்ஸ் கதிர்களை உருவாக்கித் தரும் கருவிதான் அடிப்படையானது. இதிலிருந்துதான் பொத்தானை அழுத்தியதும் எக்ஸ் கதிர்கள் வெளிப்படுகின்றன. பயனாளியை நிற்கவைத்தோ, படுக்கவைத்தோ எக்ஸ்-ரே எடுப்பது நடைமுறை.

முதலில் எந்த உறுப்புக்கு எந்த நிலையிலிருந்து எக்ஸ்-ரே எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்து கொள்கிறார்கள். பிறகு, அவருடைய உடல் பகுதிக்கு எவ்வளவு எக்ஸ் கதிர்கள் தேவை என்பதையும் கணக்கிட்டு கொள்கிறார்கள். பின்னர் அதே அளவுக்கு இந்தக் கதிர்களை ஒரு குழாய் மூலம் செலுத்துகிறார்கள். அதற்கு முன் பயனாளியின் எதிர்ப்புறம் எக்ஸ் கதிர்களைப் படியச்செய்யும் தட்டு பொருத்தப்படும். அதற்குள் எக்ஸ்-ரே பிலிம் இருக்கும். செலுத்தப்படுகிற எக்ஸ் கதிர்கள் பயனாளியின் உடலுக்குள் புகுந்து பிலிமில் படியும். அந்த பிலிமை வெளியில் எடுத்து போட்டோ பிலிமை கழுவுவதுபோல் இரு வேறுபட்ட வேதி கரைசல்களில் கழுவுகிறார்கள். அதைக் காய வைத்தபின் பார்த்தால், அதில் உடல் பகுதிகள் தெரியும். மருத்துவருக்கு இயல்பான எக்ஸ்-ரேயில் உடல் பகுதிகள் எப்படி இருக்கும் என்பது தெரியுமல்லவா? அந்த மருத்துவ அறிவின் அடிப்படையில், எக்ஸ்-ரே படத்தில் தெரிகிற உடல் பகுதிகளின் அசாதாரண வடிவமைப்பை ஒப்பிட்டுப் பார்த்து நோயைக் கணிக்கிறார்கள்.

எக்ஸ்-ரே பரிசோதனைக்கு நேரம், காலம் எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். முடிந்தவரை எக்ஸ்-ரே எடுக்கப்படும் உடல் பகுதியில் ஆடைகளை களைந்துவிட வேண்டும். மோதிரம், வளையல், கழுத்து நகைகள், கைக்ெகடிகாரம், ஊக்கு, பொத்தான், கண்ணாடி போன்றவற்றை கழற்றிவிட வேண்டும். காசு, சாவி, ஏ.டி.எம். கார்டு, உலோகப் பொருட்கள் போன்றவற்றை வெளியில் எடுத்துவிட வேண்டும். நெஞ்சுப் பகுதியை எக்ஸ்-ரே எடுக்கும்போது மட்டும் பயனாளி மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு, எக்ஸ்-ரே எடுப்பவர் சொல்லும்வரை மூச்சை வெளியில் விடாமல் அடக்கிக்கொள்ள வேண்டும்.