சிறப்புக் கட்டுரைகள்

பங்கு சந்தையில் சேமிக்கலாம், சம்பாதிக்கலாம் + "||" + You can save and earn in the stock market

பங்கு சந்தையில் சேமிக்கலாம், சம்பாதிக்கலாம்

பங்கு சந்தையில் சேமிக்கலாம், சம்பாதிக்கலாம்
‘பங்கு சந்தை’ என்பது, பல நடுத்தரக் குடும்பங்களில் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே அறியப்படுகிறது. அதிர்ஷடம் கை கொடுத்தால் பல லட்சங்களை சம்பாதிக்கலாம் என்றும், இல்லையேல் பல லட்சங்களை இழக்க நேரிடும் என்ற மாயபிம்பம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் அதே பங்கு சந்தையை, சேமிப்பிற்கான துறை என்கிறார், சுப்பிரமணி.
இவர் கடந்த 25 ஆண்டுகளாக பங்கு சந்தையை உன்னிப்பாக கவனித்து வருவதுடன், ‘மேக்ஸிடோம்’ என்ற அமைப்பின் வாயிலாக நிதி ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதோடு கல்லூரி மாணவர்களுக்கு, இலவச ஜி.எஸ்.டி.பைலிங் பயிற்சிகளையும், பங்கு சந்தை தொடர்பான விளக்கங்களையும், நிதி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

அதன் தாக்கமாகவே, பங்குசந்தை தொடர்பான பல சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.

சாதாரண நபர்கள் பங்கு சந்தையில் இணைவது எப்படி?

ரொம்ப சுலபம். ‘டிமாட்’ கணக்கு ஒன்றை தொடங்கி, பங்குகளை வாங்கி, விற்கும் இணையதளம் வாயிலாக விருப்பமான துறையில், விருப்பமான நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலமாக, பங்கு சந்தையில் நீங்கள் இணைந்துவிடுவீர்கள்.

பங்குகளின் விலை எப்படி இருக்கும்?

100 ரூபாயில் தொடங்கி, 80 ஆயிரம் வரை இருக்கும். உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ, அதற்கு ஏற்ப பங்குகளை வாங்கி வைத்து கொள்ளலாம்.

பங்கு சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், எதை கவனத்தில் கொள்ளவேண்டும்?

உணர்ச்சிவசப்படக்கூடாது. நிதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக குடும்ப தேவைகள் போக, மீதமிருக்கும் சேமிப்பு பணத்தை மட்டுமே பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்.

அப்படி எத்தனை பங்குகளை வாங்கி விடமுடியும்?

நல்ல கேள்வி இது. 2011-ம் ஆண்டு, உங்களது சேமிப்பு பணமான ரூ.2000-ல், ஒரு பங்கு 500 ரூபாய் என்ற விகிதத்தில் 4 பங்குகளை வாங்கி இருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொரு மாதமும், ஒவ்வொருவிதமான நிறுவனங்களில், முதலீடு செய்து கொண்டே இருக்கிறீர்கள். இறுதியாக, 2021-ம் ஆண்டு, உங்கள் கையில் நூற்றுக்கணக்கான பங்குகள் இருக்கும். அவை ஒவ்வொன்றின் மதிப்பும், நிச்சயம் 5 முதல் 10 மடங்கு உயர்ந்திருக்கும்.

பங்கு மதிப்பில் ஏற்றம், இறக்கம் ஏற்படுமா?

5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என பணத்தை சேமிப்பதற்காக பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள், ஏற்ற இறக்கத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

நாம் வாங்கிய நிறுவனத்தின் பங்கு திடீரென சரிந்தால் என்ன செய்ய வேண்டும்?

பங்கு மதிப்பு சரிந்தால், நீங்கள் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கைக்கு இருமடங்காக பங்குகளை வாங்க வேண்டும். அப்போதுதான் அதிக லாபம் பார்க்க முடியும்.

பங்கு வாங்கும் நிறுவனங்களை எப்படி தேர்வு செய்வது?

என்.எஸ்.இ. (National Stock Exchange) இணைய தளத்தை திறந்து பார்த்தால், ‘நிப்டி பிப்டி’ என தலைசிறந்த 50 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அந்தந்த நிறுவனங்களின் கடந்த கால லாப-நஷ்ட கணக்குகளை அடிப்படையாகக் கொண்டே அந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு பிடித்தமான துறை நிறுவனங்களை தேர்வு செய்து, முதலீடு செய்யலாம்.

துறை சார்ந்த அறிவு தேவையா?

நிதி ஆலோசகரர்களிடம் அறிவுரை பெற்ற பிறகும், கூகுள் வழிகாட்டுதலிலும் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

பங்குகளை வாங்குவது, விற்பது, நிர்வகிப்பது... இவையெல்லாம் சிக்கல் நிறைந்த வேலைகளா?

இல்லவே இல்லை. பல இணையதளங்கள் இதுபோன்ற வேலைகளை மிக சுலபமாக்கி விட்டன. நீங்கள், குறிப்பிட்ட இணையதளத்தில் கணக்கு ஒன்று தொடங்கி, அதில் இருக்கும் ‘வாங்க', ‘விற்க' ஆகிய பட்டன்களை மட்டும் அழுத்தினாலே போதுமானது. மற்றபடி, சட்டரீதியான வேலைகளை, அந்தந்த இணையதளங்களே பார்த்துக் கொள்ளும்.

பங்கு சந்தைக்குள் யாரெல்லாம் நுழையலாம்?

கல்லூரி மாணவர்கள் தொடங்கி, பணி ஓய்வு பெற்றவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற துறை இது. யாராக இருப்பினும் நுழையலாம். நிர்வகிக்கலாம். லாபம் பெறலாம்.

பங்கு சந்தை ஆபத்தானதா?

ஆபத்து நிறைந்த துறையாக பார்க்கப்படுகிறது. பேசப்படுகிறது. நாம் பங்குசந்தையை எப்படி அணுகுகிறோமோ, அதை பொறுத்துதான், இதற்கான பதில் கிடைக்கும்.

பங்கு சந்தையை எப்படி பார்க்கவேண்டும்?

பங்கு சந்தை, சேமிப்பதற்கான சிறந்த தளம். வேறு எந்த சேமிப்பு திட்டத்தினாலும், தர முடியாத லாபத்தை தரும்.

பங்கு சந்தை பற்றி படிக்க பிரத்யேக படிப்பு இருக்கிறதா?

உண்டு. என்.ஐ.எஸ்.எம். (NISM) எனப்படும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்டாக் மார்க்கெட்’ நிறுவனத்தின் கீழ் நிறைய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன்மூலம் பங்கு சந்தை பற்றி தெரிந்து கொண்டு, முதலீடு செய்ய தொடங்கலாம்.