சிறப்புக் கட்டுரைகள்

அத்தியாவசிய பொருட்களில், புதுமையை புகுத்தும் இளைஞர் + "||" + Among the essentials, the youth who innovate

அத்தியாவசிய பொருட்களில், புதுமையை புகுத்தும் இளைஞர்

அத்தியாவசிய பொருட்களில், புதுமையை புகுத்தும் இளைஞர்
அத்தியாவசிய பொருட்களில், புதுமையை புகுத்தும் இளைஞர் யார் இவர், என்ன செய்திருக்கிறார்? என்பதை நேர்காணலில் விளக்குகிறார்.
இன்றைய இளைஞர்கள் பலர், படிப்பிற்கு சம்பந்தமில்லாத துறைகளில்தான் பணியாற்றுகிறார்கள். படித்த துறையில் வேலை இல்லை, போதிய வருமானம் இல்லை, சரியான வளர்ச்சி இல்லை ... இப்படி நியாயமான காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், பெரும்பாலான இளைஞர்கள் குடும்ப சூழலை சமாளிக்கவே தங்களுக்கு சம்பந்தமில்லாத துறைகளில், சம்பந்தமில்லாத வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மணிகண்டன் சக்திவேல், தனக்கான பாதையை சிறப்பாக வகுத்திருக்கிறார். தான் படித்த துறை படிப்புகளை கொண்டே, தனக்கான எதிர்காலத்தை கட்டமைத்திருக்கிறார்.

உங்களை பற்றி கூறுங்கள்?

திண்டுக்கல் என் சொந்த ஊர். நான் எளிமையான பின்னணியை கொண்டவன். சிறுவயதில் இருந்தே அறிவியல் பாடத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தது. குறிப்பாக தாவரவியல், உயிரியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் அதிகமாக கவனம் செலுத்தினேன். தாவரவியல் கருத்துக்களை, தோட்டங்களில் முயன்று பார்ப்பது, கால்நடை வளர்ப்பின் மூலம் உயிரியல் பாடத்தினை கண்கூடாக உணர்ந்து கொள்வது, எளிமையான வேதிப்பொருட்களை வாங்கி வந்து, பரிசோதித்து பார்ப்பது என அறிவியல் சார்ந்துதான் வளர்ந்தேன்.

இப்போது என்ன செய்கிறீர்கள்?

நான் எம்.எஸ்சி. கெமிஸ்ட்ரி படித்திருக்கிறேன். எனக்கு மற்ற அறிவியல் பாடங்களைவிட, வேதியியல் பாடங்கள் ரொம்ப பிடிக்கும். ரசாயனங்களின் கலவைகள், அதன் நேர்-எதிர் வினைகள், அதனால் உண்டாகும் விளைவுகள், ரசாயனங்களின் பயன்கள், அவை எப்படி மனிதர்களுக்கு உதவுகிறது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வேதிப்பொருட்களின் பங்கு என்னவாக இருக்கிறது...? இப்படி பல விஷயங்களை அலசி ஆராய்ந்து ரசிப்பேன். அந்த ரசனையே, இன்று வேதிப்பொருள் சார்ந்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வைத்திருக்கிறது.

கெமிக்கல் ஆராய்ச்சிகளா..?

ஆம்..! அறிவியல் ஆராய்ச்சிகளை என் எதிர்காலத்தின் அடிப்படையாக வைத்துதான் முதுகலை பட்டப்படிப்பையே தொடங்கினேன். பொதுவாக எம்.எஸ்சி. கெமிஸ்டரி படித்தவர்கள், பெரிய பெரிய அறிவியல் பரிசோதனை மையங்களில்தான் நல்ல சம்பளத்தில் செட்டிலாக ஆசைப்படுவார்கள். ஆனால் என்னுடைய ஆசை, வேறுவிதமாக இருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளுக்கு வேதிப்பொருள் வாயிலாக நிரந்தர தீர்வு காண ஆசைப்பட்டேன். அதை இப்போது செய்துகொண்டிருக்கிறேன்.

எதற்காக இப்படி ஒரு முயற்சி?

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களால் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, சோப்பு பவுடரை எடுத்து கொள்வோம். ஏதோ ஒரு நாட்டில், அந்த நாட்டின் தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப, குறிப்பிட்ட வேதிப்பொருட்களால் உருவாக்கப்பட்ட சோப்பு பவுடரே இப்போது பெரும்பாலான உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வேதிப்பொருள் கலவை உலகின் எல்லா பகுதி தண்ணீருக்கும் பொருந்துமா...? என்று ஆராய்ந்தால், நிச்சயம் பொருந்தாது என்ற பதிலே கிடைக்கும். அதன் 100 சதவீத செயல்பாடு என்பது, தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப 60 சதவிகிதம், 50 சதவிகிதம் என குறையும். ஒருசில தண்ணீரில் அந்த வேதிப்பொருளின் எதிர்வினை காரணமாக, ஆடைகளின் நிறமும், தரமும் மங்க ஆரம்பித்துவிடும். ஆனால் அதே சோப்பு பவுடரில், தமிழக தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப, ஒருசில வேதியியல் மாற்றங்களை கொண்டு வரும்போது அதுசிறப்பானதாக இருக்கும். அதுபோன்ற எளிமையான ஆராய்ச்சிகளைதான், ‘மாறா' என்ற ஆராய்ச்சி முயற்சியாக முன்னெடுத்து, பல பிரச்சினைகளுக்கு நவீன தீர்வு கண்டிருக்கிறேன்.

ஆராய்ச்சிகள் மூலம் எதிர்காலத்தை கட்டமைக்க முடியுமா?

வெளிநாடுகளில், ஆராய்ச்சிகள்தான் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைத்திருக்கின்றன. யாரும் கண்டுபிடிக்காத விஷயத்தை புதிதாக கண்டுபிடித்தால்தான், ஆராய்ச்சி துறையில் நிலைத்திருக்கமுடியும் என்பதில்லை. ஏற்கனவே, நம் வீட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் சின்ன சின்ன பொருட்களை கூட, புதிய வகையில் மாற்றியமைக்கலாம். உதாரணத்திற்கு, புதிய நறுமணம் கொண்ட அகர்பத்தி தொடங்கி, கிருமி நாசினி, சோப்பு, ஷாம்பு, தேங்காய் எண்ணெய், சாம்பிராணி... இப்படி நிறைய எளிமையான பொருட்களை கூட புதுமையான முறையில் மாற்றியமைக்கலாம். இதை நீங்கள் உற்பத்தி செய்து விற்கவேண்டிய கட்டாயமில்லை. மாறாக, அதன் காப்புரிமையை விற்பனை செய்தாலே, அதிக லாபம் பார்க்கலாம்.

படித்த துறையில் வேலை வாய்ப்பு பெறுவது எப்படி?

எல்லா துறையிலும் வேலைவாய்ப்புகளை விட சுயதொழிலுக்கான வாய்ப்புகள்தான் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், மெடிக்கல்... இவை அனைத்துமே, உலக நாடுகளின் திணிப்பாகத்தான் இருக்கிறது. நம் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இவற்றை மாற்றியமைக்கும்போது, நிறைய வாய்ப்புகளை உருவாக்க முடியும். மாத சம்பளத்தைவிட, அதிகமாக சம்பாதிக்கமுடியும்.