மாத்திரைகளை 2-ஆக உடைக்கலாமா?


மாத்திரைகளை 2-ஆக உடைக்கலாமா?
x
தினத்தந்தி 16 Nov 2021 3:48 PM GMT (Updated: 16 Nov 2021 3:48 PM GMT)

உடல் உபாதைகளுக்கு டாக்டர் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் பெரிதாக இருந்தால் அதனை இரண்டாக உடைத்து விழுங்குவதை பார்த்திருப்போம்.இது மிகவும் தவறான செயலாகும். மாத்திரைகளை முழுதாக சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. ஏனெனில் மாத்திரைகளை இரண்டாக உடைப்பதனால், சில நேரங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய டோசேஜ் அளவுகள் மாறுபடக் கூடும்.

மருத்துவரிடம், மாத்திரைகளை இரண்டாக உடைக்கலாமா என்று உறுதி செய்து கொள்வது நல்லது. ஏனெனில் மாத்திரைகளை உடைக்கும் போது, அவற்றின் அளவு வேறுபடுகிறது. இதனை உட்கொள்வதனால் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே ரத்த அழுத்தம், கை, கால் நடுக்கம் உள்ளவர்கள், ஆர்த்ரைட்டீஸ், இதயநோயாளிகள் ஆகியோர் மாத்திரைகளை உட்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மாத்திரையும் தயாரிக்கப்படும் போது, அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்களின் அளவும் வேறுபடும்.

நாம் மாத்திரையை இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் உடைபடும் என்றும், அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் கூற முடியாது. வீரியமிக்க மருந்துகள் வயிற்றில் பிரச்சினை ஏற்படுத்தாமல் இருக்க கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். எனவே இவ்வகை மாத்திரைகளை முழுமையாக சாப்பிட்டால் தான் அவற்றின் பலன் கிடைக்கும்.

மாத்திரைகளை 2-ஆக உடைத்து உட்கொண்டால், வீரியமிக்க மூலப்பொருள் நேரடியாக நமது உள்ளுறுப்புகளில் செல்லும். இதனால் நமது உடலில் வேறு சில உபாதைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாத்திரைகளை இரண்டாக உடைத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், மாத்திரைகளை பிரித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும்.

சில மாத்திரைகளில் ஈரப்பதம் படக்கூடாது, காற்றில் வைக்ககூடாது என்றெல்லாம் இருக்கும். அவற்றை 2-ஆக உடைக்கிறேன் என வெளியில் நீண்ட நேரம் வைத்திருப்பதோ அல்லது இரண்டாக உடைக்க முடியாமல் இரண்டுக்கும் மேற்பட்ட வடிவங்களில் உடைப்பதனாலோ மாத்திரையின் முக்கியத்தன்மை இழந்து சிதைந்துவிடும். இதையெல்லாம் நினைவில் கொள்வது நல்லது..


Next Story