சீனர்களின் ‘பேய் திருவிழா’


சீனர்களின் ‘பேய் திருவிழா’
x
தினத்தந்தி 26 Nov 2021 4:13 PM GMT (Updated: 26 Nov 2021 4:13 PM GMT)

பேய் திருவிழா சீனா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

ஆடல், பாடல், தீபம் என ஒட்டுமொத்த சீனாவும் திருவிழாவில் திளைத்து போய்விடுமாம். ஒவ்ெவாரு ஆண்டும் சீன காலண்டர்படி 7-வது மாதத்தின் 15-ம் இரவு பேய் திருவிழாவை கொண்டாடுகிறார்கள். கி.பி. 483-ம் ஆண்டில் இருந்து சீனர்களுக்கு இந்த திருவிழாவை கொண்டாடும் வழக்கம் இருக்கிறது.

பேய் மாதத்தின் தொடக்கத்தில் பேய்கள், தங்கள் உலகத்தில் இருந்து பூமிக்கு வரும் என்பது அவர்களின் நம்பிக்கை. அப்படி வரும் பேய்கள் நிறைவேறாத ஆசை கொண்ட பேய்களாக இருக்கும். அந்த பேய்கள் ஒரு மாத காலம் வரையில் பூமியில் இருக்கும்.

அந்த ஒரு மாத காலத்தில் மறுபடியும் பூமியில் பிறந்து தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முயலும். மனிதர்களின் உடலில் புகுந்து கொள்ள சமயம் பார்த்து இருக்குமாம். இந்த மாதிரி பேய்களை, ‘பசிகொண்ட பேய்கள்,’ என்கிறார்கள். அதனால் இந்த திருவிழா ‘ஹங்க்ரி ஹோஸ்ட் பெஸ்டிவல்’ எனப்படுகிறது.

பேய்கள் பூமியில் இருக்கும் காலங்களில் சீனர்கள் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.

உதாரணமாக திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். புது வீடு வாங்க மாட்டார்கள். தொழில் தொடங்க மாட்டார்கள். இரவில் வெளியே துணிகளை காய போட மாட்டார்கள். காரணம், அதை பேய்கள் எடுத்துக்கொண்டு போய்விடுமாம்...!

சாலையில் கிடக்கும் பணத்தை எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் இதெல்லாம் பேய்களின் வேலை என நினைக்கிறார்கள். அப்படி பணத்தை எடுத்துவிட்டால் பேய்கள் பின்தொடர்ந்து வீட்டுக்கு வந்துவிடுமாம்.

விசில் அடிப்பதையும், பாட்டுகளை முணுமுணுப்பதையும் ஒரு மாத காலத்துக்கு நிறுத்திவிடுவார்களாம். அதுபோல குளத்தில் நீந்துவதையும் தவிர்ப்பார்கள். பேய்கள் நீருக்கடியில் மறைந்திருக்குமாம். இந்த ஒரு மாத காலத்துக்கு மட்டும்தான் இந்த பிரச்சினை. ஒரு மாதம் முடியும்போது பேய்கள் தங்களது உலகத்துக்கு திரும்பிவிடும். இல்லையெனில் அந்த உலகத்துக்கான கதவு அடைபட்டுவிடுமாம். அதனால் தனியாக பூமியில் மாட்டிக்கொள்ள விரும்பாத பேய்கள் அந்த மாதம் முடிந்ததும் திரும்பிவிடுமாம்.

பேய்கள் மரங்களில் வசிக்கும் என்பதால் மரங்களை சுத்தப்படுத்தி வைக்கின்றனர். நிறைவேறா ஆசையுடன் இருக்கும் தன் முன்னோர்களுக்கு செய்யும் சேவையாகவும் இதை சீனர்கள் செய்கிறார்கள். ஆனால் சீனர்கள் இன்றைக்கு இதை தங்கள் கொண்டாட்டமாகவும் மாற்றி இருக்கிறார்கள். வெவ்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்கள். இந்த பேய் பண்டிகையானது, உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.


Next Story