ஜல்லிக்கட்டு தடையை நீக்க உதவிய நடுகல்


ஜல்லிக்கட்டு தடையை நீக்க உதவிய நடுகல்
x
தினத்தந்தி 14 Jan 2022 11:55 PM GMT (Updated: 2022-01-15T05:25:44+05:30)

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஜல்லிக்கட்டு போட்டி.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஜல்லிக்கட்டு போட்டி. இந்தப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், ஜல்லிக்கட்டு காளைகள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் காயம் ஏற்படுவது வழக்கம். சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் உயிரிழப்பும் ஏற்படும். இதன் விளைவாக விலங்குரிமை அமைப்புகள் (பீட்டா) இப்போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றமும் கடந்த ஆண்டுகளில் பல முறை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது.

இருப்பினும், இந்தத் தடையை எதிர்த்து பெருந்திரளான இளைஞர்கள் போராடியதன் விளைவாக இப்போட்டி தொடர ஒரு புதிய சட்டம் 2017-ல் தமிழக அரசால் இயற்றப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ‘ஏறு தழுவுதல்’ என்ற வீரவிளையாட்டு தொடர்பான நடுகல் கோர்ட்டில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது. அந்த நடுகல் சேலம் அருங்காட்சியகத்தில் தற்போது உள்ளது.

பழந்தமிழ் இலக்கியங்களிலும், சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராக வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. சங்ககால இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. முல்லை நில ஆயர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வு அவர்களின் வீரத்தை மெய்ப்பிக்கக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது.

புதுடெல்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும், அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்துள்ளது என்பதை உணர முடியும்.

இது குறித்து சேலம் அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லை அரசு கூறியதாவது:-

கி.பி.16-ம் நூற்றாண்டில், அதாவது 400 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் கோவூரி சங்கன் என்பவர் கருமந்துறையில் நடந்த வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளையை அடக்க முயன்று உயிரை மாய்த்தார். அவரது வளர்ப்பு மகன் பெரிய பயல், அவரது நினைவாக காளையை தந்தை அடக்க முயல்வது போன்ற நடுகல்லை நிறுவி தெய்வமாக வழிபட்டு வந்துள்ளார்.

அந்த நடுகல்தான் சேலம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ‘பீட்டா’ அமைப்பினர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற்றபோது, தமிழக அரசு சார்பில், இந்த நடுகல்லும் ஒரு ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு அரசின் 9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரில் தனிப்பகுதியாகவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.

Next Story