கொரோனா பரிசோதனையை எளிமைப்படுத்தும் கருவி


கொரோனா பரிசோதனையை எளிமைப்படுத்தும் கருவி
x
தினத்தந்தி 25 Jan 2022 5:37 AM GMT (Updated: 2022-01-25T11:07:31+05:30)

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் பயோடெக்னாலஜி துறையின் இன்பெக்‌ஷன் உயிரியல் மற்றும் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் விக்ரம் சைனி மற்றும் அவரது குழுவினர் கொரோனா பரிசோதனைக்காக ஒரு புதிய ‘வைரஸ் டிரான்ஸ்போர்ட் மீடியம் கிட்’ (வி.டி.எம்) ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கொரோனா பரிசோதனைக்கு தற்போது பயன்படுத்தப்படும் ஆர்.டி.-பி.சி.ஆர் கிட்டை விட துல்லியமான முடிவுகளை தரும் விதமாக இந்த வி.டி.எம். கிட் அமைந்திருப்பதாக கூறுகிறார், டாக்டர் விக்ரம் சைனி.

‘‘தற்போதைய கொரோனா பரிசோதனை கிட்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த வி.டி.எம். 25 சதவீதம் அதிக அறிகுறிகளையும், 50 சதவீதத்துக்கும் அதிகமான அறிகுறிகளற்ற நிலைமையையும் கண்டறிய உதவுகிறது. வழக்கமாக கொரோனா பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கப்பட்டால் அந்த குப்பியில் வைரஸ் செயலில்தான் இருக்கும். அதே நிலையிலேயே அந்த மாதிரியை ஆய்வகத்திற்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும். சில சமயங்களில் அது ஆபத்தானதாகவும் அமைந்துவிடும். அந்த குப்பியை எடுத்துச்செல்லும்போது உடைக்காமலோ, கசிவு ஏற்படாமலோ பாதுகாக்க வேண்டும். அது பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியிருக்கும். அத்துடன் குப்பியை எடுத்து செல்வதற்கு சிறப்பு மருத்துவ உபகரணம் தேவைப்படும். அதாவது 2 டிகிரி செல்சியல் முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டும்.

அந்த மாதிரியை பரிசோதிக்கும் ஆய்வகத்திலும் கூட உயிர் பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். சோதனை செய்வதற்கு அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் அங்கு பின்பற்றப்பட வேண்டும். பெரிய நகரங்களில் அதற்கான வசதிகள் இருக்கின்றன. ஆனால் இந்தியா முழுவதும் சிறிய நகரங்கள், கிராமப்புறங்களில் இதனை செயல்படுத்துவது மிகவும் கடினம். இந்த பிரச்சினையை சமாளிக்கும் விதத்தில் எங்கள் வி.டி.எம்.மின் செயல்பாடு அமைந்திருக்கும்’’ என்கிறார்.

தாங்கள் கண்டுபிடித்திருக்கும் கொரோனா பரிசோதனை கிட்டின் சிறப்பம்சங்களையும் பட்டியலிடுகிறார்.

‘‘இது கொரோனா பரிசோதனைக்கான மாதிரியை சேகரிக்கும் நேரத்திலேயே வைரஸை கொல்லும். மேலும் மாதிரி சேகரிக்கப்பட்டவுடன், அதை எடுத்துச் செல்ல குளிர் வெப்பநிலை தேவையில்லை. அதனால் மாதிரியை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு ஆகும் செலவு குறையும். மருத்துவ உபகரணங்களின் தேவையும் குறையும். சிறிய நகரங்களில் கூட சில சமயங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதில்லை. எனவே எங்கள் எய்ம்ஸ் வி.டி.எம் சோதனைக் கருவி எல்லா வகையிலும் பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார் டாக்டர் சைனி.

இந்த சோதனைக் கருவியைப் பயன்படுத்தி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) உதவியுடன் நடத்தப்பட்ட கள சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தன என்றும் டாக்டர் சைனி கூறுகிறார்.

டாக்டர் சைனி எய்ம்ஸ் சார்பாக இந்த கருவிக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த கருவி இப்போது ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. “இப்போதைக்கு, வைரஸ் பரவுவதை தடுக்க அதிகளவிலான மக்கள் இதை அணுகுவது காலத்தின் தேவை. இந்த கருவியை அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் தனிநபர்கள் தொலைதூர இடங்கள் மற்றும் சிறிய நகரங்களில் கூட பயன்படுத்தலாம். பெரிய அளவில் தயாரிக்கும்போது இதன் விலையை 12 ரூபாய்க்கும் குறைவாக நிர்ணயிக்கலாம்’’ என்கிறார்.

Next Story