உறுப்பு தான விழிப்புணர்வை விதைக்க உலகம் சுற்றும் தம்பதியர்


உறுப்பு தான விழிப்புணர்வை விதைக்க உலகம் சுற்றும் தம்பதியர்
x

ரத்த தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் அளவுக்கு உறுப்பு தானம் குறித்து போதிய விழிப்புணர்வு எட்டப்படாத நிலை நிலவுகிறது. அதிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றிய புரிதல் இல்லாத நிலை நீடிக்கிறது.

''ஆரோக்கியமாக இருக்கும் இரு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கலாம். அதன் மூலம் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழக்கும் அபாயத்தில் இருக்கும் நபர்களுக்கு மறு வாழ்வு வழங்கிட முடியும். அது பற்றிய விழிப்புணர்வும், புரிதலும் பெரும்பாலானவர்களிடம் இருப்பதில்லை'' என்று வேதனையோடு சொல்கிறார், அனில் ஸ்ரீவத்சா. இவரது சகோதரர் டாக்டர் அர்ஜூன் ஸ்ரீவத்சா 2014-ம் ஆண்டு சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்திருக்கிறார், அனில் ஸ்ரீவத்சா. அந்த தருணம் தான் உடல் உறுப்பு தானம் பற்றிய சிந்தனையை அனில் ஸ்ரீவத்சாவுக்குள் விதைத்திருக்கிறது. ''சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்தால் மற்ற சிறுநீரகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு தாமும் சிறுநீரக கோளாறுக்கு ஆளாகிவிடுவோம் என்ற பயம் பலரிடம் இருந்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டுடன் பலரும் இருக்கிறார்கள்'' என்பவர் அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கி இருக்கிறார்.

இப்போது அந்த விழிப்புணர்வு, உலகளாவிய சுற்றுப்பயணமாக மாறி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'உலக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கும், போட்டியும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கு முடிவு செய்துள்ள அனில் ஸ்ரீவத்சா உறுப்பு தானம் பற்றி உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டார். அவரது மனைவி தீபாலியும் அதற்கு இசைந்து கொடுக்க, தம்பதி சகிதமாக கார் மூலம் விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். சுமார் 56 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இவர்களது பயணம் நீள்கிறது. 17 நாடுகள் வழியாக கடந்து ஆஸ்திரேலியாவை சென்றடைய இருக்கிறார்கள். செல்லும் வழியில் இருக்கும் நாடுகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட் டிருக்கிறார்கள். உறுப்பு தானம் போன்ற உன்னத முயற்சியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக மாற்று அறுவை சிகிச்சை கூட்டமைப்பு இது போன்ற நிகழ்வை நடத்தி வருகிறது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டு களியாட்டம், உடல் தானம் செய்த பிறகு பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய நடைமுறைகள், உடற்தகுதியின் முக்கியத்துவம் குறித்து வழிகாட்டும். மேலும் உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பதற்கு ஊக்குவிக்கும். அத்துடன் உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் உடல் ரீதியாக திடகாத்திரமாக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும். 2019-ம் ஆண்டு நியூகேஸில் நடந்த உலக மாற்று அறுவை சிகிச்சை விளையாட்டு போட்டியில் அனில் ஸ்ரீவத்சா முதன் முறையாக பங்கேற்றார். அதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், பந்து எறிதல் மற்றும் கோல்ப் போட்டியில் பங்கேற்றார். இதில் பந்து எறிதல் போட்டியில் அனில் ஸ்ரீவத்சா தங்கப் பதக்கத்தை வென்றார். அனில் ஸ்ரீவத்சாவிடம் இருந்து ஒரு சிறுநீரகத்தை தானம் பெற்ற அவரது சகோதரரும் கோல்ப் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

ஒரு உறுப்புக்காகக் காத்திருந்து யாரும் இறக்கக் கூடாது என்பது அனில் ஸ்ரீவத்சாவின் வேண்டு கோளாக இருக்கிறது. தனது மனைவியுடன் ஆஸ்திரேலியா பயணத்தை தொடங்குவதற்கு முன்பு அனில் ஸ்ரீவத்சா பெங்களூருவில் இருந்து காரில் காஷ்மீருக்கு சென்றார். உடல் உறுப்பு தானம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களிடம் விளக்குவதற்காக இந்த பயணத்தை தேர்ந்தெடுத்தார். ''காஷ்மீர் பயணத்தின்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை அணுகினேன். ரிஷிகேஷில் திரளாக கூடியிருந்த பொதுமக்களிடம் பேசினேன். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு இன்னும் பெருக வேண்டும்'' என்கிறார்.


Next Story