அலுவலக பணியும்.. உடல்-மன நலனும்..!


அலுவலக பணியும்.. உடல்-மன நலனும்..!
x

அலுவலக பணியில் ஈடுபடுபவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது சில ஆரோக்கிய குறைபாடுகளுக்கு வழி வகுக்கலாம். உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்வதற்கு சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே போதுமானது.

எப்போதும் சுறுசுறுப்பை தக்கவைத்துக்கொள்வது என்பது இயலாத விஷயம். அதற்காக அலட்சியமாக செயல்பாட்டால் சோம்பல் குடிகொண்டு விடும்.

மதிய உணவுக்கு பிறகு ஒருவித சோர்வு ஏற்படக்கூடும். அதனை தவிர்ப்பதற்கு சாப்பிட்டு முடித்ததும் சிறிது தூரம் நடைப்பயிற்சி சென்று வரலாம். லிப்ட்டில் செல்வதற்கு பதிலாக படிக்கட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். நாற்காலியில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்காமல் சிறிது நேரம் நின்று செய்யும் வேலைகளில் ஈடுபடலாம். 8 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக வேலை செய்யும்போது பசியை கட்டுப்படுத்த நொறுக்குத்தீனிகள் சாப்பிட விரும்புவது தவிர்க்கமுடியாதது.

பதப்படுத்தப்பட்ட சிப்ஸ், குளிர்பானங்கள், ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள் சாப்பிடுவதற்கு பதிலாக உலர் பழங்கள், பழங்கள், காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியம் காக்கும் சிப்ஸ் வகைகளை உட்கொள்ளலாம். பசி எடுக்கும் போதெல்லாம் ஆரோக்கியத்தை உள்ளடக்கிய உணவு பதார்த்தங்களை சாப்பிடலாம்.

அலுவலகத்திற்கு அவசர அவசரமாக கிளம்புவதும், தாமதமாக வீடு திரும்புவதும் தூக்க சுழற்சியை தொந்தரவு செய்து விடும். இருப்பினும், மறுநாள் புத்துணர்ச்சியுடன் பணியை தொடங்குவதற்கு உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் முழுமையான ஓய்வு கொடுக்க வேண்டும். குறைந்தது 7-8 மணி நேரம் தூங்க முயற்சிக்க வேண்டும்.

உடல் வலிமையை இழக்கச் செய்யும் கடினமான வேலையில் அதிகமாக ஈடுபடும்போது தண்ணீர் குடிக்க மறந்துவிடலாம். உடலில் தண்ணீரின் அளவு குறைவது மயக்கம் மற்றும் தூக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் இருக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள்.

கோடை காலமாக இருப்பதால், தர்பூசணி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், நன்னாரி சர்பத் போன்ற ஆரோக்கியமான பானங்களை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

நிறைய நபர்களுடன் தொடர்புகொள்வது, பல விஷயங்களை பகிர்ந்து கொள்வது, ஆரோக்கியமற்ற அலுவலக சூழல் ஆகியவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆதலால் மன ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள். அதை சரியான முறையில் நிர்வகித்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தத்தைத் தணிக்க, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். வெளியே நடந்து சென்று வரலாம். மனதை அமைதிப்படுத்தும் வேலைகளில் ஈடுபடலாம். எந்தவித சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் ஓய்வு எடுக்கலாம். வேலை முக்கியம் ஆனால் அதைவிட ஆரோக்கியம் முக்கியமானது. உடல் அளவிலும், மன தளவிலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் வேலைகளை செம்மையாக செய்து முடிக்க முடியும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.அலுவலக பணியும்.. உடல்-மன நலனும்..!


Next Story