பெண்களுக்கான பிரத்யேக பூங்கா


பெண்களுக்கான பிரத்யேக பூங்கா
x

பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும் வகையிலான பிரத்யேக பூங்கா முதல் முதலாக ஐதராபாத் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் சவுகரியமாக உபயோகப்படுத்தும் வகையில் அனைத்து வகையான கட்டமைப்புகளும் இந்த தீம் பார்க்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகளில் புதுவிதமான விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை குழந்தைகளை கவரும் வகையில் காட்சி அளிக்கின்றன. பெண்களுக்கான பிரத்யேக நடை பாதைகள், யோகாசனம் மேற்கொள்வதற்கு ஏதுவாக அமைதியான சூழல் கொண்ட இடங்கள், விருந்து நிகழ்ச்சிகளை திறந்த வெளியில் நடத்துவதற்கு ஏற்ற கட்டமைப்புகள், பெண்கள் குழுவாக அமர்ந்து கேளிக்கை, விருந்து நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்ற இடங்கள், ஜிம்மில் இருப்பது போன்று விளையாட்டு உபகரணங்களை உள்ளடக்கிய கூடம் என ஏராளமான அம்சங்களை கொண்டதாக இந்த 'தீம் பார்க்' அமைந்திருக்கிறது.

முதல்கட்டமாக இது ஐதராபாத்திலுள்ள குகட்பள்ளி ஹவுசிங் போர்டு காலனியில் நிறுவப்பட்டிருக்கிறது. இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து எல்.பி. நகர் மற்றும் செரிலிங்கம்பள்ளி ஆகிய இடங்களிலும் இதே வசதிகளுடன் கூடிய தீம் பார்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டமிடல், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை ஐதராபாத் மாநகராட்சி மற்றும் வீட்டு வசதி வாரியம் ஆகியன மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பெண்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தோடும், பொருளாதார ரீதியாக முன்னேற வைக்கும் முனைப்போடும் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெண் தொழில்முனைவோர் தங்கள் பொருட்களை காட்சிபடுத்துவதற்காக கண்காட்சி நடத்துவதற்கு தீம் பார்க்கில் இடம் ஒதுக்கியுள்ளோம். கைப்பைகள், எம்பிராய்டரி மற்றும் பிற பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது'' என்கிறார்.

இந்த பூங்கா ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்குள் பசுமையான சூழலையும், சுத்தமான காற்றையும் நிலவ செய்வதற்காக 250 வகையான செடிகள், மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மேலும் 10-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் கட்டப்பட உள்ளன. இம்முயற்சி நகரத்தில் பசுமையை அதிகரிக்கும். காற்றின் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.


Next Story