சேலை அணிந்தபடி ஸ்கேட்டிங் சாகசம்


சேலை அணிந்தபடி ஸ்கேட்டிங் சாகசம்
x

கால்களில் சக்கரங்களை கட்டிக்கொண்டு சுழலும் ஸ்கேட்டிங் சாகசத்தை ஒத்திருக்கும் ஸ்கேட் போர்டிங் சாகச பயிற்சி பெறுவதும் எளிதான விஷயமல்ல. அதற்கு நிறைய பொறுமை தேவைப்படும். உடலையும், மனதையும் மன நிலையில் வைத்திருந்தால் மட்டுமே இந்த சாகசத்தில் ஈடுபட முடியும்.

அதிலும் ஸ்கேட் போர்ட், ஸ்கேட்டிங் பயிற்சி தளங் களுக்குள் பயிற்சி மேற்கொள்வதை காட்டிலும் பூங்காக்கள், சாலைகள் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த திறந்த வெளி பகுதியில் ஸ்கேட் போர்ட் சாகசம் மேற்கொள்வது சவாலானது. இத்தகைய சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபடுவதுண்டு.

கேரளாவை சேந்த லாரிஸா டிசா கேரளாவின் பாரம்பரிய புடவையை அணிந்து கொண்டு ஸ்கேட் போர்டிங் செய்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. ஸ்கேட் போர்டிங் மீது நின்றபடி சர்வசாதாரணமாக சாலையில் பயணித்து அசத்தி இருக்கிறார். அப்போது தன்னை கடந்து சென்றவர்களுக்கு இரு கைகளையும் கூப்பி புன்னகை தவழ வணக்கம் செலுத்தி அசத்தியபடி ஸ்கேட் போர்டிங் சாகச பயணத்தை எளிமையாக மேற்கொண்டு விட்டார். கேரளாவின் இயற்கை அழகையும், பசுமை படந்த பின்னணியையும் காட்சிப்படுத்தும் வகையில் இவரின் ஸ்கேட் போர்டிங் சாகச வீடியோ அமைந்திருப்பதும் பலருடைய கவனத்தை ஈர்த்துவிட்டது.

''நான் சாலை மார்க்கமாக ஸ்கேட் போர்டிங் செய்தபோது நிறைய பேர் என்னை கடந்து சென்றார்கள். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தேன். நிறைய பேர் என்னை படம் பிடித்தார்கள். சிலர் செல்பி எடுத்தார்கள். சேலை அணிந்து கொண்டு ஸ்கேட் போர்டிங் செய்வது எளிதானது அல்ல. ஆனாலும் குடும்பத்தினர் கொடுத்த ஊக்கத்தினால் அதனை சாத்தியமாக்கிவிட்டேன்'' என்கிறார்.


Next Story