102 வயது மூதாட்டியின் ஓயாத உழைப்பு


102 வயது மூதாட்டியின் ஓயாத உழைப்பு
x

102 வயது மூதாட்டி லட்சுமி மைதி மார்க்கெட்டில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி அவற்றை ரிக்‌ஷாவில் ஏற்றிக்கொண்டு வந்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்கிறார்.

''வயது என்பது வெறும் எண் மட்டும்தான். மற்றவர்களை சார்ந்திருக்காமல் சொந்த உழைப்பின் மூலம் எந்த வயதிலும் தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்'' என்பதற்கு சாட்சியாக இருக்கிறார், லட்சுமி மைதி. 102 வயதாகும் இவர், 50 ஆண்டு களுக்கும் மேலாக காய்கறி வியாபாரம் செய்து வரு கிறார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தனது அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்ளாமல் தனது மகன், பேரன் என ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் உதவி செய்து வருகிறார்.

லட்சுமியின் பூர்வீகம் மேற்கு வங்க மாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள ஜோகிபெர் கிராமம். தினமும் அதிகாலை 4 மணி முதல் சுறுசுறுசுறுப்பாக இயங்க தொடங்கிவிடுகிறார். அருகில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி அவற்றை ரிக்‌ஷாவில் ஏற்றிக்கொண்டு வந்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்கிறார்.

''40 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் இறந்தார். அவருடைய வருமானத்தை சார்ந்தே வாழ்ந்து பழகி இருந்ததால் பல நாட்கள் சாப்பிட உணவு இல்லாமல் கஷ்டப்பட்டோம். குடும்ப செலவுகளை சமாளிப்பதற்கு ஏதேனும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காய்கறி வியாபாரத்தை தேர்வு செய்தேன். அப்போது எனது மகனுக்கு 10 வயதுதான் ஆகி இருந்தது. தனியொரு பெண்மணியாக காய்கறி வியாபாரத்தையும், குடும்பத்தையும் கவனிக்க வேண்டியிருந்தது. திடீரென்று எனக்கு நோய்வாய்ப்பட்டால் வியாபாரமும், குடும்பமும் முடங்கி போய் விடும். அந்த சமயங்களில் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். அத்தகைய சூழலிலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய் வதற்கு என்னால் முடிந்ததை செய்வதற்கு முயற்சித்தேன்'' என்கிறார்.

லட்சுமியின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதில் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு முக்கிய பங்குண்டு. அந்த தொண்டு நிறுவனம் சார்பில் முதியோர் சுய உதவி குழு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் லட்சுமி போன்ற முதியோர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தார்கள். சுய உதவிக்குழுவின் ஆதரவுடன் தொழிலை விரிவுபடுத்திக்கொண்டார்கள். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கினார்கள். லட்சுமியின் மகன் சுய தொழில் தொடங்குவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் ரூ.40 ஆயிரம் கடனும் வழங்கி இருக்கிறது. இதுபற்றி 64 வயதாகும் லட்சுமியின் மகன் கவுர் கூறுைகயில், '' என் தாயார் எனக்கு மட்டும் உதவி செய்யவில்லை. என் பிள்ளைகளின் தேவைகளையும் நிவர்த்தி செய்தார். என் மகளின் திருமணத்திற்கு நிதி உதவியும் செய்தார். எங்களுக்கு வீடு கொடுத்தார். பெரும்பாலும் மகன்கள்தான் வயதான தாயாரை கவனித்துக்கொள்வார்கள். ஆனால் என் தாயார் ஒருபோதும் என்னை சார்ந்திருக்கவில்லை. அவர் ஒரு இரும்பு பெண். இளம் வயதிலேயே சொந்த காலில் நின்று தன்னையும் வலுப்படுத்திக்கொண்டு குடும்பத்தையும் கவனித்துக்கொண்டார். அந்த போராட்ட குணத்தை இன்றளவும் கைவிடாமல் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்'' என்கிறார்.

28 வயதாகும் லட்சுமியின் பேரன் சுப்ரதா கூறுைகயில், ''என் அப்பாவால் எனக்கு வாங்கிக் கொடுக்க முடியாததை பாட்டியிடம் கேட்டு வாங்கிக்கொள்வேன். என் விருப்பங்களை எல்லாம் அவர் நிறைவேற்றி வைத்துவிடுவார்'' என்கிறார்.

102 வயதை கடந்த பிறகும் சோர்வின்றி உற்சாகமாக வியாபாரத்தை கவனித்து வருகிறார். அவரிடம் ஓய்வு பெறும் திட்டம் இருக்கிறதா? என்று கேட்டால் அதைப்பற்றி இன்னும் யோசிக்கவில்லை என்றே பதில் சொல்கிறார்.


Next Story