கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் செல்வராணி தர்ணாவை தொடக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், வன பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிக்காலத்தை பணி வரன்முறை செய்திட வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். 2 ஆண்டுகளாக விடுவிக்கப்படாத கொரோனா சிகிச்சைக்கான தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடைபெற்றது.