பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Sep 2022 5:58 PM GMT (Updated: 22 Sep 2022 6:06 PM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 51 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

தமிழகம் முழுவதும் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதனை கண்டித்து நேற்று மாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் விழுப்புரம் மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அதன் தொகுதி செயலாளர் ரியாஸ்அலி தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அமலாக்கத்துறை அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் போில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ்சூப்பிரண்டு புகழேந்தி கணேசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் இப்ராகிம் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story