சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்


ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் கோகர்ணேசுவரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி லிங்கத்திற்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, காய்கறிகளால் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல கோவிலில் உள்ள சிவலிங்கங்களுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் நடைபெற்றது. அன்னாபிஷேகத்தையொட்டி பிரகதாம்பாளுக்கு காய்கறிகளால் மாலை செய்யப்பட்டு அணிவிக்கப்பட்டிருந்தது.

சாந்தநாத சாமி கோவில்

இதேபோல திருக்கோகர்ணம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. டவுனில் உள்ள சாந்தநாத சாமி கோவிலில் நேற்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

கீரமங்கலம்

கீரமங்கலத்தில் 84 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிவன் சிலை மற்றும் தலைமை புலவர் நக்கீரர் சிலையுடன் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மெய்நின்றநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கருவறையில் உள்ள பிரமாண்ட சிவலிங்கத்திற்கு அன்னம், காய், கனி, நவதானியம், மலர்கள் தோரணங்களாக அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. அதேபோல ஒப்பிலாமணி அம்பிகைக்கு சிறப்பு அலங்காரத்தில் வழிபாடுகள் நடந்தது. விழாவில் கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கீரனூர், வடகாடு

கீரனூர் சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வடகாடு அருகே மாங்காட்டில் உள்ள விடங்கேஷ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் மாங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவரங்குளம்

திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த அன்னத்தை எடுத்துக் கொண்டு சிவாச்சாரியார்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று அருகில் உள்ள தெப்பக்குளத்தில் கரைத்து விட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் சமேத மங்களநாயகி அம்பாள் கோவில் உள்ளிட்ட சிவன்கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.


Next Story