ராணுவ லெப்டினன்டாக படுகர் இன இளம்பெண் தேர்வு


ராணுவ லெப்டினன்டாக படுகர் இன இளம்பெண் தேர்வு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 5:39 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியை சோ்ந்த படுகர் இன இளம்பெண் ராணுவத்தில் லெப்டினன்டாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியை சோ்ந்த படுகர் இன இளம்பெண் ராணுவத்தில் லெப்டினன்டாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

லெப்டினன்ட் தேர்வு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் பெங்களூரு ராஷ்ட்ரிய ராணுவ பள்ளியில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் பவித்ரா (வயது 23). இவர் சிறு வயதில் இருந்தே தந்தையின் செயல்பாடுகளை பார்த்து, தானும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

பவித்ரா தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் முடித்தார். பின்னர் ஸ்டாப் செலக்சன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 9 மாத காலம் பயிற்சி பெற்றார். பயிற்சி நிறைவடைந்த பிறகு பவித்ரா லெப்டினன்ட் ஆக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களில் முதல் முறையாக லெப்டினன்ட் ஆக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பவித்ரா ஆரம்ப கல்வியை மும்பையிலும், 6-ம் வகுப்பு முதல் பெங்களூரு ராஷ்ட்ரிய ராணுவ பள்ளியிலும் படித்தார். இவர் தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.) ஏ கிரேடு பெற்றுள்ளார்.

வெள்ளிப்பதக்கம்

கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி சென்னையில் நடைபெற்ற சத்திய பிரமாண நிகழ்ச்சியில் சிறந்த பயிற்சி பெற்றதற்காக பவித்ராவுக்கு வாள் மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அவர் ஜம்மு காஷ்மீரில் லெப்டினன்ட் ஆக பொறுப்பேற்க உள்ளார். இதற்கிடையே பவித்ரா சொந்த ஊருக்கு வருகை தந்தார். அவருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஆக்கி அமைப்பு சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதுகுறித்து பவித்ரா கூறுகையில், நாடு எவ்வளவு முன்னேறி இருந்தாலும் தற்போது வரை சமுதாயத்தில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் என எது இருந்தாலும் நமது மனம் எதை சொல்கிறதோ, அதை கேட்டு செயல்பட வேண்டும். பெற்றோரை பெருமைப்படுத்தும் விதமாகவே, நமது குறிக்கோள்கள் இருக்க வேண்டும் என்றார்.


Next Story