தென்காசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தென்காசியில் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் ரதவீதிகள், சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார் ஆகிய பகுதிகளில் பல கடைகளின் முன்பகுதி சாலை வரை நீட்டிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. மேலும் சாலையோர கடைகளும் சாலையை ஆக்கிரமித்து இருந்தன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று 2 முறை நகராட்சி நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டது. அப்போது வியாபாரிகள் கோரிக்கை வைத்ததன் பேரில், அதற்கான தேதி தள்ளி போடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது கடைகளின் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அவ்வாறு அகற்றாமல் இருந்த கடைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நகராட்சி ஆணையாளர் பாரிசான் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். நகராட்சி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கான செலவுத்தொகை சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.