சேதம் அடைந்துள்ள பி.ஏ.பி. கால்வாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
canel
பெதப்பம்பட்டி அருகே பி.ஏ.பி. கால்வாய் சேதமடைந்து கிடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.ஏ.பி. கால்வாய் சேதம்
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பி.ஏ.பி. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் சுமார் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீர் செல்லும் நிலையில் கிளை கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
பி.ஏ.பி. கிளை கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடும் போது மட்டுமே அவசர கதியில் சீரமைக்கப்படுகிறது. கால்வாய்கள் புதர்மண்டி கிடப்பது மட்டுமல்லாமல் சில இடங்களில் சீமை கருவேல மரங்களின் வேர்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் கால்வாய்கள் சேதமடைந்து காணப்படுகிறது.
சீரமைக்க கோரிக்கை
குடிமங்கலம் அருகே புதுப்பாளையம் பிரதான கால்வாய் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பெதப்பம்பட்டி அருகே பி.ஏ.பி. கிளைகால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் அதிக அளவில் புதர்மண்டி காணப்படுகிறது. கால்வாய்களை ஒட்டியுள்ள பகுதிகளில் மரங்கள் வளர்ந்து கான்கிரீட் தளம் பெயர்ந்து உள்ளன.
பிரதான கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடும் போது மட்டும் அவசர கதியில் சீரமைக்கபடுவதால் தண்ணீர் வீணாவதோடு கால்வாய்களும் பெருமளவில் சேதம் அடைகிறது.
எனவே பி.ஏ.பி. கால்வாய்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். சேதம் அடைந்த பி.ஏ.பி.கால்வாய் கரையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.