விழுப்புரம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு நுழைவுவாயில் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் தீயணைப்பு துறையினர் மீட்டனர்


விழுப்புரம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு    நுழைவுவாயில் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்    தீயணைப்பு துறையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

Worker threatened to commit suicide in court premises

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த பாதிராப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலை மகன் அய்யனார் (வயது 50), கூலித்தொழிலாளி. இவர் மீது திண்டிவனம், மயிலம் போலீஸ் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் அய்யனாரை மயிலம் போலீசார் விசாரணைக்காக அழைத்துள்ளனர். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரிடமிருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தற்கொலை முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த அய்யனார் நேற்று காலை விழுப்புரம் கோர்ட்டு பகுதிக்கு வந்தார். பின்னர் கோர்ட்டு முன்பு சுமார் 30 அடி உயரமுள்ள கான்கிரீட் நுழைவுவாயில் மீது ஏறி, தான் கையில் வைத்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது அவர், தன்னை போலீசார் பொய் வழக்கில் கைது செய்ய முயற்சிப்பதாக கூறி, போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.

இதை அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்து அய்யனாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் பலனில்லை.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணா மேற்பார்வையில் தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து ஏணி மூலம் அந்த நுழைவுவாயில் மீது ஏறினர். பின்னர் அய்யனாரிடம் தீயணைப்பு துறையினர் சமாதானமாக பேசி ஏணி மூலமாக கீழே இறக்க முயற்சித்தனர். அதற்கு அவர் ஒத்துழைக்காததால் அவருடைய கை, கால்களை கயிற்றால் கட்டி பாதுகாப்பாக கீழே இறக்கினர். தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

இதுகுறித்து தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் கோா்ட்டு நுழைவுவாயில் மீது ஏறி கூலித்தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story