இடத்தை அபகரிக்க முயற்சி: குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


இடத்தை அபகரிக்க முயற்சி:  குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா  கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

Worker dharna with family

விழுப்புரம்


விழுப்புரம் அருகே சாலையம்பாளையத்தை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 30), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி, தாய், குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது 2 குழந்தைகளுக்கும், அந்த பகுதியில் வைத்தே காலை உணவையும் வழங்கினார்கள். எனன நடக்கிறது என்று தெரியாமல் அந்த குழந்தைகளும் உணவை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தனர். இந்த நிலையில், போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டரிடம் மனு அளிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து, சிவபாலன், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அந்த மனுவில், நான் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். எனது தாய்வழி பாட்டி பார்வதி, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் கிராம மந்தைவெளி புறம்போக்கில் வீடு கட்டி குடியிருந்து வந்தார். அவர் உயிருடன் இருக்கும்போதே நானும், எனது தாய் செல்வி ஆகிய இருவரும் இந்த வீட்டில் வசித்து வந்தோம். எனக்கு திருமணமாகி மனைவியுடன் இதே வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்த சூழலில் கரும்பு வெட்டும் தொழிலுக்காக நான் வெளியூர் சென்றிருந்தபோது எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர், நான் வசித்து வந்த வீட்டை சுற்றிலும் வேலி போட்டுள்ளார்.

அவரிடம் இதுகுறித்து கேட்டபோது பட்டா அவர் பெயரில் இருப்பதாக கூறுகிறார். மேலும் கும்பலாக வந்து எங்களிடம் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறி மிரட்டுகின்றனர். என்னிடமிருந்து இதனை அபகரிக்க முயற்சிக்கின்றனர். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த இடத்திற்கு பட்டா வழங்க வேண்டுமென அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story