சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

Steps should be taken to catch cows roaming on roads

புதுக்கோட்டை

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்

இலுப்பூரில் புதிய பஸ் நிலையம், கடைவீதி, தாலுகா அலுவலகம், பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரதான சாலைகளில் அதிகளவு மாடுகள் சுற்றித்திரிகிறது. மாடுகள் வளர்ப்பவர்கள் பால்கறக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கால்நடைகளை சாலைகளில் விட்டு விடுகின்றனர்.

சாலையோரம் உள்ள பழக்கடைகள், பூக்கடைகளில் உள்ள பொருட்களை மாடுகள் கடை உரிமையாளர்கள் அசந்த நேரத்தில் கீழே தள்ளி தின்று விடுகிறது. சில நேரங்களில் சாலையோரம் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று அமர்ந்து விடுவதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படுகிறது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மேலும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் மீது மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் மோதி காயமடைந்து வரும் சம்பவமும் நடந்து வருகிறது. ஆகையால் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டும் இதற்கான நிரந்தரதீர்வு காணமுடியும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தினந்தோறும் விபத்துகள்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தனபால் கூறுகையில், சாலைகளில் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகள் பகல் நேரங்களில் எங்காவது மேய்ச்சலுக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் சாலையில் படுத்துக் கொள்கிறது.

இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் சாலைகளில் இந்த மாடுகள் படுத்து கிடப்பது கூட தெரியாமல் அதன் மீது மோதி விபத்தை சந்திக்கும் நிகழ்வு தினந்தோறும் நடந்து வருகிறது என்றார்.

மாடுகளின் கொம்புகளில் ஸ்டிக்கர்

சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை ஒன்றாக சேர்த்து, இரவு நேரத்தில் சாலைகளில் ஒட்டப்படும் மிளிரும் ஸ்டிக்கர்களை அந்த மாடுகளின் இரு கொம்பு பகுதியிலும் ஒட்டலாம். இதனால் சாலையில் இந்த மாடுகள் படுத்திருக்கும் போது தொலை தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் முன் கூட்டியே அறிந்து கொண்டு விபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றார்.


Next Story