புன்னம் சத்திரம்- வேலாயுதம்பாளையம் பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்கப்படுமா?
அதிவேகமாக செல்லும் வாகனங்களால் புன்னம் சத்திரம்- வேலாயுதம்பாளையம் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி-ஈரோடு நெடுஞ்சாலை
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதி வழியாக திருச்சி-ஈரோடு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக திருச்சியில் இருந்து நொய்யல், கொடுமுடி, மலையம்பாளையம், கணபதிபாளையம், ஈரோடு, வெள்ளக்கோவில், ஊஞ்சலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், அதேபோல் ஈரோடு பகுதியில் இருந்து கரூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருநள்ளாறு, மயிலாடுதுறை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் சென்று வருகின்றன.
புகழூர் காகித ஆலை மற்றும் சிமெண்டு ஆலைகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து புன்னம்சத்திரம் வழியாக லாரிகளில் பல்வேறு வகையான மூலப்பொருட்கள் ஏற்றிக் கொண்டு செல்கின்றன.
அதிவேகமாக செல்லும் வாகனங்கள்
இதேபோல் புன்னம் சத்திரம், உப்புபாளையம், குப்பம், பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து அரளைக்கல், சம்பட்டிகல், பல்வேறு ரகமான ஜல்லிக்கற்கள், செயற்கை மணல் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் புன்னம் சத்திரம் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன.
இந்தநிலையில் புகழூர் காகித ஆலையிலிருந்து புன்னம் சத்திரம் வழியாக செல்லும் நெடுஞ்சாலையை கடக்கும் போது அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே நெடுஞ்சாலை பகுதியில் காகித ஆலை பிரிவு சாலை அருகே ரவுண்டானா அமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
அடிக்கடி விபத்து
புன்னம் சத்திரம் அருகே பழமாபுரம் பகுதியை சேர்ந்த சுசீந்திரமூர்த்தி:- புன்னம் சத்திரம் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன. இந்தநிலையில் வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம் சத்திரம் வழியாக வரும் வாகனங்கள் திருச்சி -ஈரோடு சாலைக்கு வரும்போது பிரிவு சாலை இருப்பது தெரியாமல் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த இடத்தில் ரவுண்டானா அமைத்து விபத்தை தடுக்க வேண்டும்.
உயிரிழப்பை தடுக்கலாம்
வேட்டமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி:- புன்னம் சத்திரம் வழியாக இருசக்கர வாகனத்தில் அடிக்கடி கரூர் சென்று வருகிறேன். அப்போது இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கின்றன. அதேபோல் வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம் சத்திரம் நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் இந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. ஜல்லிக்கற்கள், செயற்கை மணலை ஏற்றி செல்லும் லாரிகள் தார் சாலையிலிருந்து பிரிவு சாலைக்கு செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. எதிரேவரும் வாகனத்தை பார்க்காமல் லாரியை ஓட்டுகிறார்கள். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காகித ஆலைக்கு செல்வதற்காக பிரிவு சாலைக்கு வாகனத்தை திருப்பும் போதும் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதேபோல் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் முன்னால் செல்லும் வாகனங்கள் மீது பின்னால் வரும் வாகனங்கள் இடித்தும் விபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே வேலாயுதம்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் நெடுஞ்சாலையின் குறுக்கே ரவுண்டானா அமைப்பதால் விபத்துகளை தடுக்க இயலும், உயிரிழப்பையும் தடுக்க இயலும்.
ரவுண்டானா அமைக்க கோரிக்கை
குறுக்குச்சாலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மணிவேல்:- புன்னம் சத்திரம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு நான் காரை ஓட்டி செல்கிறேன். இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது வேலாயுதம்பாளையம், காகித ஆலைபிரிவு சாலையில் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. அதேபோல் விபத்தில் சிக்கியவர்கள் கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழந்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் ரவுண்டானா அமைத்தால் இந்த இடத்தில் நடைபெற்று வரும் விபத்தை தவிர்க்க முடியும்.
விபத்தை தடுக்கலாம்
லாரி டிரைவர் முருகேசன்:- நான் இந்த வழியாக காகித ஆலைக்கு பல்வேறு மூலப்பொருட்களை ஏற்றி செல்கிறேன். இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் வருகின்றன. காகித ஆலை செல்லும் பிரிவு சாலைக்கு வாகனத்தை திருப்பும் போது எதிரே வரும் வாகன ஓட்டிகள் பிற வாகனங்களை கவனிக்காமல் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே புன்னம் சத்திரம் பகுதியில் வேலாயுதம்பாளையம் பிரிவு சாலை அருகே ரவுண்டானா அமைத்துக் கொடுத்தால் வாகன விபத்தை தடுக்க இயலும்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
புன்னம் சத்திரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்:- புன்னம் சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த வழியாக ஜல்லிக்கற்கள் கொண்டு செல்லும் லாரிகளும், காகித ஆலைக்கு செல்லும் லாரிகளும், அதேபோல் இந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் பல்வேறு வாகனங்களும் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே காகித ஆலை பிரிவு சாலையில் உள்ள நெடுஞ்சாலையில் ரவுண்டானா அமைத்தால் வாகன விபத்தை குறைக்க முடியும். எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் ரவுண்டானா அமைத்து வாகன விபத்தை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.