மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
people
-
சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் முதல் குளத்துப்பாளையம் வழியாக அணைப்புதூர் வரை செல்லும் பாதை உள்ளது. இந்தப்பாதையில் தினசரி பனியன் நிறுவன தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் பஸ், கார், லாரி ஆகிய வாகனங்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.
கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக குளத்துப்பாளையம் பெரிய தோட்டம் பகுதி அருகில் ரோட்டில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களும் சிரமத்திற்குள்ளாகினர். எனவே அப்பகுதி மக்கள் பள்ளமான அந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் மேம்படுத்த வேண்டும் என்று கூறி ரோட்டில் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி, துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் சண்முகம், கவுரீஸ்வரி, தங்கபாண்டி, நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்ட பொறியாளர் கணேசன், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் அந்த ரோட்டில் மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.