பனை ஏறும் எந்திரம் கண்டுபிடிப்பவருக்கு விருது
பனை ஏறும் எந்திரம் கண்டுபிடிப்பவருக்கு விருது வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் மாநில அளவில் சிறந்த பனையேறும் எந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கான விருது ரூ.1 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. பனை மரத்தில் எவ்வித ஆபத்துமின்றி இலகுவாக ஏறுவதற்காகவும், பனை நுங்கு மற்றும் பிறபொருட்களை திறம்பட அறுவடை செய்வதற்காகவும், கருவிகளை கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு மிக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த பனையேறும் எந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கான விருது வழங்கப்படும். தோட்டக்கலை பேராசிரியர், வேளாண் பொறியியல் பேராசிரியர், தோட்டக்கலை கூடுதல் இயக்குனர் (மத்திய மற்றும் மாநில திட்டம்), தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தால் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி ஆகியோர் இடம்பெற்றுள்ள குழு மூலமாக சிறந்த பனையேறும் எந்திரம் கண்டுபிடிப்பாளர் தேர்வு செய்யப்பட்டு, பனையேறும் எந்திரம் கண்டுபிடிப்பதற்கு ஆகும் மொத்த செலவு, விலையின் உண்மைத்தன்மை, எந்திரத்தின் செயல்திறன் மற்றும் ஒட்டு மொத்த பயனளிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கு தகுதியானவர் இந்த குழுவால் முடிவு செய்யப்படும். மேலும் பனையேறும் எந்திரத்தை கண்டுபிடிப்பவர்கள் இக்குழுவின் முன்னிலையில் செயல் விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.