புதிய நெல் ரகத்தை ஆர்வமுடன் பயிரிட்டுள்ள விவசாயிகள்
இயற்கை சீற்றத்தை தாங்கி வளரும் "சம்பா சப் ஒன்" நெல் ரகத்தை விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்துள்ளனர்.
வத்திராயிருப்பு,
இயற்கை சீற்றத்தை தாங்கி வளரும் "சம்பா சப் ஒன்" நெல் ரகத்தை விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்துள்ளனர்.
நெல் சாகுபடி
வத்திராயிருப்பு தாலுகா பகுதியான வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் முதல் போக நெல் நடவினை நட்டு தற்போது விவசாய பணியினை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நெல் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
புதிய ரகம்
மழை போன்ற இயற்கை சீற்றத்தால் விளைந்த நெற்கதிர்கள் சாய்ந்து விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுப்பதற்காக புதிதாக வேளாண் துறையினர் அறிமுகப்படுத்திய 120 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய நெல் வகையான "சம்பா சப் ஒன்" என்கிற புதிய ரகத்தினை பெரும்பாலான விவசாயிகள் நடவு செய்துள்ளனர். இந்த ரக நெல்லானது தற்போது கதிர் விட்டுள்ளது. இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்போது விளைந்து இன்னும் ஒரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக உள்ளது.
அறுவடைக்கு தயார்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் நெல்லை தான் பிரதானமாக சாகுபடி செய்து வருகிறோம். இந்த நெல்லானது மழை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளை தாங்கி வளரக்கூடிய "சம்பா சப் ஒன்" என்கிற புதிய நெல்லை தற்போது சாகுபடி செய்துள்ளோம். இந்த நெல்லானது அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளது.
தற்போது வத்திராயிருப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த மழை விவசாயத்திற்கு நல்லது ஆகும். இந்த புதிய ரக நெல் ஏக்கருக்கு 30 மூடைகள் வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அறுவடைக்கு முன்பு இந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.