தீக்குளித்து திருநங்கை தற்கொலை
Transgender suicide by arson
சமயபுரம்:
தீக்குளித்தார்
மண்ணச்சநல்லூரில் இருந்து சமயபுரம் செல்லும் சாலையில் உள்ள வெங்கங்குடி கள்ளர் தெருவில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருநங்கை ஒருவர் வந்து தங்கி இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் மண்எண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தீ மள மளவென்று உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் அவரது அலறினார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், அந்த திருநங்கையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
சாவு
அந்த திருநங்கைக்கு சுமார் 30 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் புதுக்கோட்டையில் எந்த பகுதியை சேர்ந்தவர்?. எதற்காக இங்கு வந்து தங்கி இருந்தார்? என்பது பற்றியும், பாலியல் பிரச்சினையால் யாரேனும் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
மேலும் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மண்ணச்சநல்லூர், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் திருநங்கைகளிடமும், புதுக்கோட்டை பகுதியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.