போலீசாரை கண்டதும் தலைதெறிக்க ஓடிய காதல் ஜோடிகள்


போலீசாரை கண்டதும் தலைதெறிக்க ஓடிய காதல் ஜோடிகள்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:58 AM IST (Updated: 15 Feb 2023 1:05 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தையொட்டி சித்தன்னவாசல் சுற்றுலாதலத்திற்கு வந்த காதல் ஜோடிகள் போலீசாரை கண்டதும் தலைதெறிக்க ஓடினர். படகு சவாரி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

காதலர் தினம்

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் காதலர் தினத்தன்று காதலர்களில் சிலர், முகாமிட்டு ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதும் மலையின் உச்சியில் ஆர்வ மிகுதியால் ஆபத்தாக பல்வேறு கோணங்களில் செல்பி எடுப்பதும், சிலர் அநாகரீக செயல்களில் ஈடுபடுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

அதேபோன்று சிலர் சித்தன்னவாசல் பூங்காக்கள், செடி, கொடிகள் நிரம்பிய பகுதிகளில் அமர்ந்து அநாகரீக செயல்பாடுகளில் ஈடுபடுவதால் அவ்வழியாக செல்லும் மற்ற சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கின்றது.

எனவே அது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தியில் வெளியிடப்பட்டது.

காதல் ஜோடிகள் ஓட்டம்

இதையடுத்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் சித்தன்னவாசல் நுழைவு பகுதி, பூங்காக்கள் சமணர் படுக்கை, படகு குளம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் சித்தன்னவாசல் நுழைவு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு வந்த காதல் ஜோடிகள் சிலர் பஸ்சை விட்டு இறங்கியதும் போலீசாரை கண்டதும் ஓட்டமெடுத்தனர். சில காதல் ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் சில சுற்றுலா பயணிகள் சித்தன்னவாசல் உள்ளே செல்லாமல் வெளியிலேயே பொழுதை கழித்தனர்.

புதுமண தம்பதிகள் கொண்டாட்டம்

சித்தன்னவாசலுக்கு சுற்றுலா வந்த புதுமண தம்பதிகள் சுற்றுலா பயணிகள் அங்குள்ள பூங்காக்கள், சமணர்படுக்கை, அஜந்தா ஓவியங்கள், குகை ஓவியங்கள் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். மேலும் சித்தன்னவாசல் வந்த புதிய திருமண தம்பதிகள், காதல் திருமணம் செய்த தம்பதிகள் பரிசு பொருட்கள், இனிப்புகள் வழங்கி காதலர் தினத்தை கொண்டாடினர்.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

மேலும் சித்தன்னவாசலில் படகு குளத்தில் உள்ள படகுகள் அனைத்தும் உடைந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதாலும், தண்ணீர் பற்றாக்குறையிலும் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர். சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் பூங்காக்களில் உள்ள விளையாட்டு பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்து கிடக்கும் விளையாட்டு பொருட்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story