விதைக்கிழங்குக்கு மீண்டும் மானியம் வழங்கப்படுமா?-குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி


விதைக்கிழங்குக்கு மீண்டும் மானியம் வழங்கப்படுமா?-குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விதைக்கிழங்குகளுக்கு மீண்டும் மானியம் வழங்கப்படுமா? என விவசாயிகள், குறைதீர்ப்பு கூட்டத்தில் கேள்வி எழுப்பினர்.

நீலகிரி

ஊட்டி

விதைக்கிழங்குகளுக்கு மீண்டும் மானியம் வழங்கப்படுமா? என விவசாயிகள், குறைதீர்ப்பு கூட்டத்தில் கேள்வி எழுப்பினர்.

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-

ஊட்டி விவசாயி பிரகாஷ்:- நீலகிரி மாவட்ட கிழங்கு விவசாயிகளுக்கு நஞ்சநாடு அரசு தோட்டம் மற்றும் தீட்டுக்கள் பகுதியில் உள்ள உருளைக்கிழங்கு உற்பத்தி மையம் மூலம் விதைக்கிழங்கு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு முன்னர் வரை, விதை கிழங்குக்கு கிலோ ரூ.10 மானியம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 வருடங்களாக விதைக்கிழங்குக்கு மானியம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் தற்போது விதைக்கிழங்கு கிலோ ரூ.40 என விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. உருளைக்கிழங்கை பொறுத்த வரை பெரிய லாபம் கிடையாது பூமி பதமாக இருப்பதற்காக தான் சாகுபடி செய்யப்படுகிறது.

எனவே விதைக்கிழங்குக்கு மீண்டும் மானியம் வழங்கி தரமான விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய உதவித்தொகை

விவசாயி தேவதாஸ்: பாரத பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில் பதிவு செய்வதில் ஆன்லைனில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தற்போது வரை பதிவு செய்ய முடியவில்லை.

கலெக்டர் அம்ரித்: பிரதமர் உதவித்தொகை தகுதி உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தோட்டக்கலைத் துறையினர் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுண்டவயல் விவசாயி ரகுநாதன்: தோட்டக்கலை துறை மூலம் அமைக்கப்படும் சுற்றுலாவுக்கு பயணப்படி, உணவுப்படி மற்றும் போக்குவரத்து கட்டணம் உயர்த்த வாய்ப்பு உண்டா?

தோட்டக்கலை துறை அதிகாரி:-அட்மா திட்டத்தின் மூலம் கண்டுணர்வு சுற்றுலாவுக்கு பயணப்படி உள்ளிட்டவற்றை அதிகரிக்க அரசுக்கு கருத்துரு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் வருவாய்

முண்டகுன்னு விவசாயி ஆனந்த்:-கூடலூரில் தோட்டக்கலைத் துறை மூலம் பழச்செடி, பூச்செடிகள் விற்பனை செய்தால் பொதுமக்களுக்கும் பயன் கிடைக்கும். அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்? நர்சரியில் விலை அதிகமாக உள்ளது.?

தோட்டக்கலை அதிகாரி:- தேவாலா அரசு தோட்டக்கலை பண்ணையில் பழச் செடிகள், வாசனைபயிர்கள், நாற்றுகள், மற்றும் அலங்கார செடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிறு தேயிலை விவசாய சங்க நிர்வாகி தேவதாஸ்:-பந்தலூர் உப்பட்டி, ஏலமன்னா குந்தலாவு, சேரன்கோடு, கொளப்பள்ளி, கையுன்னி, அய்யன்கொல்லி, எருமாடு உள்ளிட்ட பல பகுதி விவசாயிகள் மனுக்கள் அளிக்க, வந்து செல்வதற்கு காலவிரையம் மற்றும் வாகன செலவு அதிகம் ஏற்படுகிறது. எனவே அந்தப் பகுதியில் தோட்டக்கலைத் துறை கிளை அலுவலகம் திறக்க வேண்டும்.

இதேபோல் பல்வேறு விவசாயிகளும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.


Next Story