அதிமுக பொதுக்குழு விவகாரம்: சிவில் வழக்கு மூலம் சட்டப்போராட்டம் நீடிக்கும் - ஓ.பி.எஸ் ஆதரவாளர் திருமாறன் பேட்டி
சென்னை,
கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்து உள்ளது.
இது தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் வழக்கறிஞருமான திருமாறன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானது. பொதுக்குழு தீர்மானங்களை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு எடுத்துக்கொள்ளவில்லை. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்த சிவில் மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் சிவில் வழக்கை பாதிக்காது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதனால் வழக்கு இன்னும் முடியவில்லை. கீழமை நீதிமன்ற வழக்குகள் தொடர்கின்றன. ஓ.பன்னீர்செல்வம் அனுமதி பெற்று சிவில் வழக்கு மூலம் சட்டப்போராட்டம் நீடிக்கும்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, தீர்மானங்கள் குறித்து எதுவும் சொல்லவில்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையான வெற்றியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.