கோத்தகிரி வந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வரவேற்பு
உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பயணமாக கோத்தகிரி வந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோத்தகிரி
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் தமீம் அன்சாரி. ஒரு கை இல்லாத மாற்றுத் திறனாளியான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள், ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி இன்றியமையாதது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீண்ட தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று காலை கோவையில் இருந்து சைக்கிள் பயணமாக ஊட்டிக்கு சென்றார். அங்கிருந்து சென்னைக்கு செல்வதற்காக நேற்று மதியம் கோத்தகிரி வழியாக வந்தார். அங்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் மோகன் மற்றும் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்குவித்து அங்கிருந்து வழியனுப்பி வைத்தனர். இதுகுறித்து தமீம்அன்சாரி கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் பலவிதமான புதிய நோய்கள் மனிதர்களை தாக்கி வரும் நிலையில், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி அவசியம் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னைக்கு மொத்தம் 550 கிலோ மீட்டர் தொலைவிற்கு விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.