ஒட்டு மொத்த காவிரி படுகையும் அழிந்து விடும்


ஒட்டு மொத்த காவிரி படுகையும் அழிந்து விடும்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

டெல்டாவில், நிலக்கரி சுரங்க திட்டத்தை அமல்படுத்தினால் ஒட்டுமொத்த காவிரி படுகையும் அழிந்து விடும் என்று பேராசிாியர் ஜெயராமன் கூறினார்.

மயிலாடுதுறை

டெல்டாவில், நிலக்கரி சுரங்க திட்டத்தை அமல்படுத்தினால் ஒட்டுமொத்த காவிரி படுகையும் அழிந்து விடும் என்று பேராசிாியர் ஜெயராமன் கூறினார்.

ஆலோசனைகூட்டம்

மயிலாடுதுறையில், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி படுகையில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், அதை ஒட்டிய நிலப்பகுதியில் ஒரு புதிய நிலக்கரி சுரங்கமும் என 6 புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காவிரி படுகை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

புதிய நிலக்கரி சுரங்கங்கள்

தற்போது வீராணம் நிலக்கரி திட்டம், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம், சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம், தஞ்சை மாவட்டம் வடசேரி நிலக்கரி திட்டம், அரியலூர் மாவட்டம் மைக்கல்பட்டி நிலக்கரி திட்டம் ஆகிய புதிய திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 6 நிலக்கரி சரங்க திட்டங்களுக்காக 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டங்களில் வீராணம் பழுப்பு நிலக்கரி திட்டம், பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம், சேத்தியாதோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம், வடசேரி நிலக்கரி திட்டம் ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல படுகைக்குள் அமைந்துள்ளன.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

தஞ்சை மாவட்டம் வடசேரி பகுதியில் 68.30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க இருக்கிறார்கள். இதற்காக மினரல்ஸ் எக்ஸ்புளொரேஷன் கன்சல்டன்சி லிமிடெட்(எம்.இ.சி.எல்) நிறுவனம் 66 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் திட்ட முன் ஆய்வை முடித்துள்ளது.

இப்பகுதி வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் இருந்து 13 கி.மீ். தூரத்திலும், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் இருந்து 16 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இப்பகுதியில் 141.3 மீட்டர் ஆழத்தில் இருந்து 225.8 மீட்டர் ஆழம் வரை நிலக்கரி இருப்பதாக எம்.இ.சி.எல். நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்த நிறுவனம் தமிழக அரசின் எந்த அனுமதியும் இல்லாமல் இப்பகுதியில் ஆய்வுகள் நடத்தி, நிலக்கரி இருப்பை மதிப்பீடு செய்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக எம்.இ.சி.எல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒட்டுமொத்த காவிரி படுகையும் அழியும்

காவிரி படுகை முழுவதும் எண்ணெய்-எரிவாயு வளமும், நிலக்கரியும் உள்ளது. இதை மத்திய அரசு எடுக்க முயன்றால் ஒட்டுமொத்த காவிரிப் படுகையும் அழிந்து போகும். தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாடு குலைந்து போகும். தமிழ்நாட்டின் கனிமவளத்தை கையகப்படுத்தி தனியாருக்குத் தாரை வார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது. எனவே மத்திய அரசின் போக்கை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் இயற்ற வேண்டும்.

போராட்டம்

தமிழக அரசு உடனடியாக காவிரி படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்க புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். அல்லது பழைய சட்டத்தின் வரம்புக்குள் வேளாண் மண்டல பரப்பின் பகுதி முழுவதையும் கொண்டுவர வேண்டும்.2020-ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். பழைய எண்ணெய்-எரிவாயு திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் நிலக்கரி சுரங்கங்கள் குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிா்பார்க்கிறோம். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story