வேன் உரிமையாளர், டிரைவர் மீது தாக்குதல்
மந்தாரக்குப்பம் அருகே வேன் உரிமையாளர், டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மந்தாரக்குப்பம்,
தகராறு
மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் ராஜ்குமார் (வயது 25). வேன் உரிமையாளர். இவருடைய வேனை வடக்குவெள்ளூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ரமேஷ்(42) என்பவர் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராஜ்குமார், ரமேஷ் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வடக்குவெள்ளூர் நோக்கி சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன்(44) என்பவர் ராஜ்குமார், ரமேசிடம் ஏன் வழியில் நின்று பேசுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கத்திவெட்டு
இதையடுத்து ராஜேந்திரன் தனது உறவினர்களான மணிகண்டன் மகன்கள் அருண்கண்ணன் (32), அஜித்கண்ணன் (30), உக்ரவேல் மகன் பிரவீன்(33) ஆகியோரை வரவழைத்து ராஜ்குமாரையும், ரமேசையும் சரமாரியாக தாக்கினர். அந்த சமயத்தில் அருண்கண்ணன், ராஜ்குமாரை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் புதுச்சேரி தனியார் மருத்துவமனையிலும், ரமேஷ் கடலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் அஜித்கண்ணன் உள்பட 4 பேர் மீது மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து, ராஜேந்திரன், அருண்கண்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.