மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: அமராவதி ஆற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வைகாசி திருவிழா
கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு வைகாசி திருவிழா வருகிற 14-ந்தேதி முதல் ஜூன் மாதம் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதனையொட்டி வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 9.15 மணிக்குள் கம்பம் நடும் விழா நடைபெறுகிறது. 19-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. 21-ந்தேதி காப்பு கட்டுதலும், 29-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. மேலும் 28, 29, 30, 31-ந்தேதிகளில் மாவிளக்கும், பால்குடமும் நடக்கிறது.
சுத்தம் செய்யும் பணி தீவிரம்
29,30-ந்தேதிகளில் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்தி கடன்கள் செலுத்தும் விழாவும் நடைபெறுகிறது. 31-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா நடக்கிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இதனையொட்டி பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.