புதுமண்ணி ஆற்றில் உள்ள மண் குவியலை அகற்ற வேண்டும்
கொள்ளிடம், ஜூலை.2- கொள்ளிடம் அருகே புதுமண்ணி ஆற்றில் உள்ள மண் குவியலை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே புதுமண்ணி ஆற்றில் உள்ள மண் குவியலை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பாசன வாய்க்கால்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வருவது புதுமண்ணியாறு பாசன வாய்க்கால்.
இந்த வாய்க்காலில் இருந்து கொள்ளிடம் பகுதியில் 100-க்கணக்கான கிளை வாய்க்கால்கள் பிரிந்து சென்று சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் உள்ள விளை நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது.
மேலும் மழைக்காலங்களில் அதிக தண்ணீர் வரத்து இருக்கும்போதும், அதிகப்படியான உபரி நீர் திறந்து விடப்படும்போதும் பழையபாளையம் கிராமத்தில் புது மண்ணி ஆற்றில் அமைந்துள்ள கிட்டியணை என்ற கதவனை மூலம் உப்பனாற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கலந்து பிறகு வங்கக்கடலில் சென்று கலக்கிறது.
மண் குவியல்
இந்த பிரதான வாய்க்காலில் இரு கரைகளையும் ஒட்டி கான்கிரீட் மூலம் வலுப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் மாதானம் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரப்பட்ட மண்குவியல் வெளியேற்றாமல் அப்படியே வாய்க்காலுக்குள் கிடக்கிறது. கடந்த ஜூன் 11-ந் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் இன்னும் சில நாட்களில் கடைமடை பகுதியான கொள்ளிடம் பகுதிக்கு வந்து சேர இருக்கிறது.
ஆனால் கொள்ளிடம் பகுதியின் இந்தபிரதான பாசன வாய்க்காலில் உள்ள மண் குவியல்களை அகற்றினால் மட்டுமே தண்ணீர் பாசனத்திற்கு எளிதில் சென்று சேரும்.ஆனால் கரை பலப்படுத்தும் பணி மட்டும் நடைபெறுகிறதே தவிர வாய்க்காலின் நடுவில் உள்ள மண் குவியலை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வலியுறுத்தல்
இதுகுறித்து புது மண்ணியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கோதண்டராமன் கூறுகையில், கொள்ளிடம் கடைமடை பகுதியில் உள்ள புதுமண்ணியாறு இப்பகுதியின் பிரதான பாசன, வடிகால் வாய்க்காலாக உள்ளது. இந்த வாய்காலின் கரைகள் கான்கிரீட் மூலம் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
ஆனால் வாய்க்காலின் நடுப்பகுதியில் பொக்லின் எந்திரம் கொண்டு தூர் வாரப்பட்ட மண் குவியல் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்படியே உள்ளது. பாசனத்திற்கு இந்த பாசன வாய்க்காலின் மூலம் தண்ணீர் விரைவில் வர உள்ளதால் பாசனத்திற்கான தண்ணீரை எந்த விதத்திலும் தடை ஏற்படாமல் நிலங்களுக்கு எளிதில் போய் சேரும் வகையில் உடனடியாக புதுமண்ணியாற்றில் உள்ள மண்குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் என்றார்.