அரசு பஸ் மோதி 100 ஆடுகள் செத்தன


அரசு பஸ் மோதி 100 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 29 Dec 2022 1:48 AM IST (Updated: 29 Dec 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே அரசு பஸ் மோதி 100 ஆடுகள் செத்தன. மேலும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற அதன் உரிமையாளரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர்

வேப்பூர்,

200 ஆடுகளுடன் வந்தார்

ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆட்டு வியாபாரிகள், கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களில் ஆட்டு கிடை அமைப்பது வழக்கம்.

விளைநிலங்களுக்கு ஆட்டு சாணங்கள் மூலமாக இயற்கை உரம் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில், நிலத்தின் உரிமையாளர்கள் கிடை அமைக்க இவர்களை அழைத்து செல்வார்கள். இதற்கென ஒரு குறிப்பிட்ட தொகையையும் ஆடுகளின் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்வார்கள்.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் லட்சுமணன் (வயது 39) என்பவர் சுமார் 200 ஆடுகளை வேப்பூர் பகுதிக்கு ஓட்டி வந்து, தங்கியிருந்தார்.

ஆடுகள் கூட்டத்துக்குள் புகுந்த பஸ்

நேற்று முன்தினம் இரவில், லட்சுமணன் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் இருந்து மேய்ச்சலுக்காக வேப்பூர் நோக்கி தனது ஆடுகளை ஓட்டிச் சென்றார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் ஆடுகளுடன் மெதுவாக சென்று கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 2.15 மணிக்கு மேல் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆடுகளுடன் லட்சுமணன் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ஆடுகள் கூட்டத்துக்குள் புகுந்து, சிறிது தூரம் சென்று நின்றது.

ஆடுகளுடன் உரிமையாளர் சாவு

இதனால், ஆடுகள் நாலாபுறமும் சிதறி ஓடின. இருப்பினும் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் அடிபட்டு செத்தன. அதேநேரத்தில் ஆடுகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த லட்சுமணனும் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே பஸ்சுக்கு பின்னால் வந்த ஒரு கார், வட இந்தியாவில் இருந்து வந்திருந்த சுற்றுலா பஸ், லாரி ஆகியனவும் ஆடுகள் மீது ஏறி இறங்கி சென்றது.

போலீஸ் விசாரணை

விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து லட்சுமணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இறந்த ஆடுகளை அங்கிருந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். அதை தொடர்ந்து அப்பகுதியில் பொக்லைன் மூலம் குழி தோண்டி ஆடுகளை மொத்தமாக அடக்கம் செய்தனர்.

விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story