திருட்டுப்போன 162 செல்போன்கள் மீட்பு
வேலூர் மாவட்டத்தில் திருட்டுப்போன 162 செல்போன்கள் ‘செல் டிராக்கர்’ என்ற திட்டத்தின் மூலம் 15 நாட்களில் மீட்கப்பட்டது. அவற்றை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
செல் டிராக்கர்
தொலைந்துபோன மற்றும் திருட்டுப்போன செல்போன்கள் தொடர்பான புகார்களை பெறுவதற்கு வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 'செல் டிராக்கர்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் காவல்துறை வழங்கிய 'வாட்ஸ்அப்' எண்ணுக்கு (9486214166) வரப்பெற்ற புகார்கள் மூலம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 162 செல்போன்கள் மீட்கப்பட்டது.
அந்த செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கி உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடும் நடவடிக்கை
பின்னர் இதுகுறித்து டி.ஐ.ஜி.முத்துசாமி கூறியதாவது:-
'செல்டிராக்கர்' என்ற திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் 371 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்களின்பேரில் ரூ.35 லட்சம் மதிப்பிலான 162 பேரின் செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் தொடர் நடவடிக்கை காரணமாக சாராய விற்பனை குறைந்துள்ளது. கஞ்சா விற்பனையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி அருகே கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்லூரி அருகில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை கல்லூரிகளில் உள்ள போதைப்பொருள் எதிர்ப்பு குழுவினர் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் உள்ள காவல் சிறார் குழுக்களுக்கு புத்துயிர் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.