ஊட்டியில் மண் குவியல் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து பலி-வீட்டு தடுப்புச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது பரிதாபம்


தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் வீட்டு தடுப்புச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது பரிதாபம் மண் குவியல் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து பலியாகினர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் வீட்டு தடுப்புச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது பரிதாபம் மண் குவியல் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து பலியாகினர்.

தடுப்புச்சுவர் கட்டும் பணி

சென்னையை சேர்ந்த குமரேசன்- பத்மினி தம்பதியினருக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை குந்தாஹவுஸ் பகுதியில் சொந்தமாக இடம் உள்ளது. இவர்கள் அந்த இடத்தில் வீடு கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து வீடு கட்டும் பணியை அர்ஷத் என்ற ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தனர். இதன்படி கடந்த ஒரு மாதமாக வீடு கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் வீட்டின் அருகே 35 அடி நீளம் 15 அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்டுவதற்காக 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி நேற்று நடந்தது.

மண் சரிந்து 2 தொழிலாளர்கள் புதைந்தனர்

இந்த வேலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த மாரக்கவுண்டன்புதூரை சேர்ந்த சேட்டு (வயது 54), வேலு (28) உள்பட 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மதியம் சுமார் 12 மணி அளவில் பள்ளம் தோண்டும் பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்தது. அப்போது, திடீரென்று அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் சரிந்து விழுந்தது. இதில் சேட்டு, வேலு ஆகிய 2 பேர் மீது மண் விழுந்து மூடியதால் நிலத்தில் உயிரோடு புதைந்தனர். மற்ற 2 பேர் தப்பித்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்து பதறிப் போன தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியாததால் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பெயரில் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மண்ணில் புதைந்த 2 பேரையும் மீட்டனர். இதில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

விபத்து நடந்த தகவலை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறுகையில், தடுப்புச்சுவருக்காக பள்ளம் தோண்டும் பணிகள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் நடைபெற்றுள்ளது. எனவே இதுகுறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். அப்போது அவருடன் ஆர்.டி.ஓ. துரைசாமி, போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் மணிக் குமார் உள்பட பலர் இருந்தனர்.

இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிதல் 304 (2) என்ற சட்டத்தின் கீழ் ஒப்பந்ததாரர் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தடுப்புச்சுவர் கட்டும் பணியின் போது மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளிக்கு புதுத்துணியுடன் வருவதாக மகள்களுக்கு வாக்குறுதி

மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த வேலுவுக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பல நாட்களாக இங்கு தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், தற்போது விடுமுறை இல்லை என்றும் தீபாவளிக்கு விடுமுறை கிடைக்கும் என்றும் அப்போது நிச்சயமாக புது துணி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருகிறேன் என்று மகள்களிடம் ஆசை ஆசையாக கூறியுள்ளார். இதனால் புது துணியுடன் தந்தையின் வரவை ஆசையாக மகள்கள் எதிர்நோக்கி இருந்த நிலையில், மண் குவியல் சரிந்து விழுந்த விபத்தில் வேலு இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை நிலைகுலைய செய்து உள்ளது.

கடைசி ஒரு தட்டு மண்

வீட்டைச் சுற்றி தடுப்புச்சுவர் கட்டுவதற்காக 5 அடி ஆழத்திற்கு நேற்று பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இருந்த போது, உள்ளே கொஞ்சம் மண் சிதறி கிடந்தது. எனவே அந்த கடைசி ஒரு தட்டு மண்ணை மட்டும் அள்ளிவிட்டு வந்து விடுகிறேன் என்று வேலுவும், சேட்டுவும் பணியில் ஈடுபட்டனர். அப்போதுதான் மண் குவியல் சரிந்து விழுந்து இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.


Next Story