சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
பரங்கிப்பேட்டை அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பம் பாரதிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). இவரது வீட்டுக்கு கடந்த 6.7.2021 அன்று டி.வி. பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி தனது தம்பியுடன் வந்தாள். இதையடுத்து ராஜேந்திரன், அந்த சிறுமியின் தம்பியிடம் பணம் கொடுத்து கடைக்கு சென்று வருமாறு அனுப்பி வைத்தார். இதனால் சிறுமி மட்டும் வீட்டில் இருந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது அந்த சிறுமியை ராஜேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி சத்தம் போட்டார். சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியிடம் விசாரித்தபோது, நடந்த விவரத்தை சிறுமி அழுதபடி கூறினாள்.
20 ஆண்டு சிறை
பின்னர் இது பற்றி சிறுமியின் தாய் சிதம்பரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் ராஜேந்திரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ரூ.5 லட்சம் இழப்பீடு
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சமூக நலத்துறை மூலம் நலவாழ்வு அல்லது அரசின் ஏதாவது ஒரு சிறப்பு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீட்டை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.