முத்திரையிடாத 35 தராசுகள் பறிமுதல்
குன்னூரில் முத்திரையிடாத 35 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊட்டி
சென்னை தொழிலாளர் ஆணையர் உத்தரவின்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகள், குன்னூர் நகராட்சி மார்க்கெட் மற்றும் நகரின் பிற பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009-ன் கீழ் குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) சதீஸ்குமார் தலைமையில் தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 70 மீன் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் முத்திரையிடாமல் வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட 35 எடை எந்திரங்கள் மற்றும் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தொழிலாளர் நலத்துறையினர் கூறுகையில் வியாபாரிகள் அதற்குரிய கட்டணம் செலுத்தி உடனடியாக முத்திரையிட்டு வியாபாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மேற்படி எடை இயந்திரங்கள் மற்றும் தாரசுகளை வியாபாரத்திற்கு பயன்படுத்தும் வியாபாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையாக ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.