காட்டேரி பூங்காவுக்கு 45 ஆயிரம் பேர் வருகை
கோடை சீசனில் காட்டேரி பூங்காவுக்கு 45 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் தோட்டக்கலைத்துறையின் காட்டேரி பூங்கா உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த பூங்காவின் கீழ்பகுதியில் ரன்னிமேடு ரெயில் நிலையம் இருக்கிறது. பூங்காவில் மலர் செடிகள், அலங்கார செடிகள் உள்ளன. கோடை சீசனையொட்டி இங்கு பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்கின. மேட்டுப்பாளையத்தில் இருந்து காட்டேரி வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், இந்த பூங்காவை கண்டு ரசித்து செல்கின்றனர். அதன் அருகே பசுமையான தேயிலை தோட்டத்தை பார்வையிட்டு வருகிறார்கள். ஏப்ரல், மே மாத கோடை சீசனில் காட்டேரி பூங்காவை 45 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கடந்த ஆண்டு 37 ஆயிரத்து 660 பேர் வருகை தந்தனர். ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட போதும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதனால் கோடை சீசனின் போது, காட்டேரி பூங்காவில் கோடை விழா நடத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.