ஸ்டூடியோவில் ரூ.8¼ லட்சம் கேமராக்கள் கொள்ளை


ஸ்டூடியோவில் ரூ.8¼ லட்சம் கேமராக்கள் கொள்ளை
x

Cameras worth Rs 8¼ lakh stolen from studio

திருச்சி

மணப்பாறை:

கேமராக்கள் கொள்ளை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பழைய காலனியை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 25). இவர் மணப்பாறையில் திருச்சி சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே 'லைட் அண்டு ஷேடு' என்ற பெயரில் நவீன வசதிகள் கொண்ட ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவர் ஸ்டூடியோவை பூட்டி விட்டு சென்றார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் மீண்டும் ஸ்டூடியோவை திறக்க வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கண்ணாடி கதவில் இருந்த பூட்டும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 2 கேமராக்கள், 6 லென்சுகள், ஒரு 'பிளாஷ்' மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

ஸ்டூடியோவில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய மோப்ப நாய், சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணப்பாறையில் பிரதான சாலையில் உள்ள ஸ்டூடியோவில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story