9 அஞ்சலக உதவியாளர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு
Scooter gift to 9 postal assistants
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் சார்பில், அஞ்சலக உதவியாளர்களுக்கு அகில இந்திய அளவில் போட்டி நடந்தது. இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்குடன், அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கை இணைத்து பொதுமக்கள் அனைவரும் இந்த வங்கி செயலி மூலமாக தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு தொகை, செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்களில் பணம் செலுத்த இயலும். டிஜிட்டல் முறையிலான இந்த சேவையை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் தேனி கோட்டத்தில் பணியாற்றும் அஞ்சலக உதவியாளர்கள் 9 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு வழங்கும் விழா தேனியில் நேற்று நடந்தது. விழாவுக்கு தேனி கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். தென்மண்டல தபால் துறை தலைவர் ஜெய்சங்கர், தமிழ்நாடு வட்ட தபால் துறை இயக்குனர் ஆறுமுகம், புதுடெல்லி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி உதவி பொது மேலாளர் விகாஸ்தால், தமிழ்நாடு உதவி பொது மேலாளர் திவாகரா ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினர். விழாவில், தேனி கோட்ட முதுநிலை மேலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் தபால் துறை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.