668 பேருக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்
வருவாய்-பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 668 பேருக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.
திருமக்கோட்டை:
வருவாய்-பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 668 பேருக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
கோட்டூர் ஒன்றியம் வல்லூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 668 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 லட்சத்து 41 ஆயிரத்து 251 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய அங்காடி கட்டிடம் திறப்பு விழா நடந்தது. விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் கலெக்டர் சாருஸ்ரீ, ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உரிமை தொகை
விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியதாவது:- பெண்களுக்கான உரிமை தொகை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பெண்கள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய நேரத்தில் வழங்கி பயன்பெற வேண்டும். தமிழக அரசு மலைகுறவர்கள் உள்ளிட்ட அனைத்து சாதிகளுக்கும் சான்றிதழ் வழங்கி வருகிறது.மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தர தொடர்ந்து தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கத்தில், அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனாமணி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் புவனா, மன்னார்குடி நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன், கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ் செல்வன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணிமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.