வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு
புதிதாக வாங்கிய லேப்டாப் செயல் இழந்ததால், வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டுத்தொகையை தனியார் நிறுவனம் வழங்கும்படி மதுரை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதிதாக வாங்கிய லேப்டாப் செயல் இழந்ததால், வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டுத்தொகையை தனியார் நிறுவனம் வழங்கும்படி மதுரை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
லேப்டாப் பழுது
மதுரை பாமாநகரைச் சேர்ந்த முகமது ஆசிக், மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் கடந்த 2021-ம் ஆண்டில் பிரபல நிறுவனத்தின் லேப் டாப் ஒன்றை ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்துக்கு வாங்கினேன். சில நாட்களிலேயே அந்த லேப்டாப் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. பின்னர் மதுரையில் உள்ள அந்த தனியார் நிறுவனத்தின் பழுதுநீக்கும் சர்வீஸ் சென்டரில் கொடுத்தேன். அவர்களும் பழுதுநீக்கிவிட்டதாக கொடுத்தனர். ஆனாலும் அந்த லேப்டாப் சரியாக இயங்கவில்லை. தொடர்ந்து பலமுறை சர்வீஸ் செய்தும், எந்த பலனும் இல்லை. பின்னர் முற்றிலும் செயல்படாத நிலைக்கு சென்றது.
இதுகுறித்து தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை. இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே செயலற்ற லேப்டாப்பை பெற்றுக்கொண்டு புதிய லேப்டாப் வழங்க வேண்டும். இதற்காக உரிய இழப்பீட்டை செலுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
தயாரிப்பு கோளாறு
இந்த வழக்கு நுகர்வோர் கோர்ட்டு தலைவர் பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் லேப் டாப்பை பழுதுநீக்கிய சர்வீஸ் சென்டர் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரின் லேப் டாப்பில் தயாரிப்பு கோளாறுகள்தான் உள்ளன. எனவே அதை தயாரித்த நிறுவனம்தான் இதற்கு பொறுப்பு என தெரிவித்தார்.
ரூ.1 லட்சம் இழப்பீடு
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனம், மனுதாரரின் பழுதான லேப்டாப்பை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள புதிய லேப்டாப்பை வழங்க வேண்டும். மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.1 லட்சத்தை இழப்பீடாக 2 மாதத்தில் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.