வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி
மேல்மலையனூர் அருகே வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
விழுப்புரம்
இன்ஸ்டாகிராம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா மேல்புதுப்பட்டை சேர்ந்தவர் மோகன் (வயது 33). இவர் தனது மனைவியின் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி கொண்டிருந்தபோது வொர்க் பிரம் ஹோம் என்று ஒரு லிங்கில் இருந்த விளம்பரத்தை பார்த்தார்.
பின்னர் அந்த லிங்கினுள் சென்றவுடன் ஒரு செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டு அதில் மற்றொரு லிங்க் வந்தது. உடனே மோகன், அந்த லிங்கிற்குள் சென்றதும் டெலிகிராம் ஐ.டி.யில் இருந்து தொடர்புகொண்ட நபர், எவ்வாறு ரீசார்ஜ் செய்து டாஸ்க் முடிப்பது என்பதை கூறியுள்ளார். அவர் கூறியபடி மோகன், ரூ.200 செலுத்தி ரூ.345-ஐ பெற்றுள்ளார்.
வாலிபரிடம் பணம் மோசடி
அதன் பிறகு கடந்த 23-ந் தேதியன்று அவரது மனைவி கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலமும், தனது செஞ்சி கிளையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலமும் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 600-ஐ 10 தவணைகளாக அனுப்பியுள்ளார். ஆனால் மோகனுக்கு சேர வேண்டிய தொகையை தராமல் அந்த மர்ம நபர்கள் ஏமாற்றி மோசடி செய்ததோடு மீண்டும் பணம் கட்டச்சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மோகன், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.