கார்கள் விற்பனையில் ரூ.1¾ லட்சம் மோசடி
தேனி மாவட்டத்தில் கார்கள் விற்பனையில் ரூ.1¾ லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 4 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள ஒரு தனியார் கார் விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் முத்துப்பாண்டியன் (வயது 50). இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், "நான் பணியாற்றும் நிறுவனத்தில் போடி அம்மாகுளத்தை சேர்ந்த முகமது ரியாஜ்ராஜா (42), பெரியகுளம் பெருமாள்புரத்தை சேர்ந்த நரசத் பாதுஷா (32), வடபுதுப்பட்டியை சேர்ந்த விவேக் (33), போடியை சேர்ந்த முகமதுஆசில் (33) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். எங்கள் நிறுவனத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வங்கிக்கடன் மூலம் 12 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. அதன் மூலம் நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகையில், ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 355-ஐ ஊழியர்கள் 4 பேரும், நிறுவனத்தின் பெயரில் போலியான முத்திரை தயார் செய்து, அதை பயன்படுத்தி பண மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், முகமது ரியாஜ் ராஜா, நரசத் பாதுஷா, விவேக், முகமது ஆசில் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.