மழையால் 1 லட்சம் எக்டேர் சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு


மழையால் 1 லட்சம் எக்டேர் சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழையால் 1 லட்சம் எக்டேர் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

மன்னார்குடி:

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழையால் 1 லட்சம் எக்டேர் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என

அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான குழு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறது

அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே முதல்சேத்தியில் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களை பார்வையிட்ட அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது, இதேபோல உளுந்து, பச்சை பயிறு, கடலை, எள் ஆகிய பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

1 லட்சம் நெற்பயிர்கள் பாதிப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் நேரடியாக பாதிப்பின் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் 1 லட்சம் எக்டேர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. நெல் மணிகள் முற்றிலும் சேதமடைந்து முளைத்துவிட்டன. ஈரப்பதமும் அதிகரித்து காணப்படுகிறது.

இவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்குவது மற்றும் கொள்முதல் செய்வது குறித்து முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் அளித்தால் நடவடிக்கை

அறுவடை எந்திரங்களை வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதலாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முழுவதும் 3,504 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 519 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நெல் கொள்முதலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியிலோ அல்லது நேரடியாகவோ புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிவாரணம் வழங்க நடவடிக்கை

இதைத்தொடர்ந்து கொரடாச்சேரி அருகே எட்டியலூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது. அங்கிருந்த விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

அறுவடை செய்யும் நேரத்தில் இந்த மழையால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்தார்.

தரையில் அமர்ந்து ஆய்வு செய்தார்

உணவு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தரையில் அமர்ந்து பயிர்களை ஆய்வு செய்து அதனை அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடமும் விளக்கி கூறினார்.

இந்த ஆய்வின் போது திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ராயநல்லூர்

ஆலத்தம்பாடி அருகே வடகாடு,கோவிலூர், ராயநல்லூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாரிமுத்து எம்.எல்.ஏ. உள்பட பலர் உடனிருந்தனர்.

இதேபோல் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் பார்வையிட்டார்.


Next Story